நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :30, ஏப்ரல் 2012(12:34 IST)
மாற்றம் செய்த நாள் :30, ஏப்ரல் 2012(12:34 IST)ஆண்களின் அணுகுமுறை மோசமாயிருக்கு!
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா!!”

                                                                                                           - பாடலாசிரியர் தேன்மொழிதாஸ்


               ரியதாஸ் - லீலா என்ற பூக்களிலிருந்து எடுத்து தேனி கொடுத்திருக்கும் ‘தேன்’மொழி, படைப்புலகிற்கு நன்கு பரிட்சயம். அவருடன் தொலைபேசியில் உரையாடியபோது ’தேன்’மொழி முழுவதுமாக புரிந்தது.

               கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா, சிறுகதை எழுத்தாளர், உதவி இயக்குநர் என்று பன்முகம் கொண்ட அவரிடம் பால்யம், இலக்கியம் குறித்து கேட்டபோது வார்த்தைகள் மழலையில் தவழ்ந்தது.  திரையுலகம், திருமணம், ஆண்கள் குறித்து கேட்டபோது வார்த்தைகள் ரவுத்ரம் பழகியது.

* உங்களின் பெரும்பாலான கவிதைகள் ஏன் பால்யமொழியில் அமைந்திருக்கின்றன?


              ஆரஞ்சு பழத்தை பிதுக்கிவிட்டு வந்த சுளைநீரை.... ‘ஆரஞ்சு பழத்துக்குள் எப்படிப்பா மழை போச்சு’ என்று கேட்டிருக்கிறேன். எல்லா இலைகளும் அசையுது. இந்த முட்டைகோஸ் மட்டும் ஏம்ப்பா ஒன்னு மேல ஒன்னு மூடி சோம்பேறியா படுத்து தூங்குது என கேட்டிருக்கிறேன். இந்த காளான் எறும்புக்கு குடையாப்பா  என்று இயற்கை குறித்து எனக்குள் எழுந்தவற்றையெல்லாம் அப்பாவிடம் கேட்க ஆரம்பித்திருக்கிறேன். 

மூன்று வயதில் இருந்து இப்படி கேள்வியின் நாயகியானேன்.  ஏழு வயதிலிருந்து எனக்குள் எழுந்தவற்றை எழுதி வைக்கத் தொடங்கிவிட்டேன். பின்னாளில் நான் சொன்னதாய் அப்பா சொன்னவற்றையும், நான் எழுதி வைத்திருந்ததை பார்த்தபோதும் அவற்றில் ஒரு அழகியல் தெரிந்தது.  அவை கவிதைகளாக கண்ணடித்தன.  எனவேதான் அவற்றை தொகுத்து ‘இசையில்லாத இலையில்லை’ கவிதை புத்தகமாக வெளியிட்டேன்.

* இயற்கை குறித்த ஆச்சர்யங்களையும் இயற்கையினுடனான அனுபவங்களையுமே அதிகம் எழுதிவருகிறீர்களே?

             மனிதர்களால் ஆட்கொள்ளவே முடியவில்லை என் இதயத்தை!.  இயற்கையும் பறவைகளும் சிறு விலங்குகளும்தான் என்னை ஆட்கொள்கின்றன.  இயற்கை மீதான காதல் எழுந்ததற்கு நான் வளர்ந்த சூழலே காரணம்.  தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் ’மணல் ஆறு’தான் நான் பிறந்து வளர்ந்த இடம்.  மணல் ஆற்றில் மொத்தம் இரு நூறு குடும்பங்கள் இருக்கு.  அதுவும் வரிசையாக இருக்காது.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கும்.  மணல் ஆற்றில் டீக்கடை கூட கிடையாது. அனைத்து தேவைகளுக்காகவும் பல மைல் தூரம் போக வேண்டும்.  பள்ளிக்கும் அப்படித்தான் போகவேண்டும்.  அப்படி பள்ளிக்கு போகும் வழியெங்கும் காடு, அருவிகள், பறவைகள், யானைகள்தான்.  என் வீட்டைச் சுற்றியும் இப்படியான சூழல்தான்.  அங்கங்கே கிடக்கும் ஆலங்கட்டி மழையை அள்ளி பாலித்தீன் பைகளில் போட்டுக்கொண்டு விளையாடியபடியேதான் பள்ளிக்குச்செல்வேன்.  

           மின் விளக்குகள் என்பதையே அறியாத மணல் ஆறுக்கு தீப்பந்தங்கள்தான் வெளிச்சம் கொடுக்கும்.  பள்ளி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு திரும்புகையில் இரவு வந்துவிடும்.  தீப்பந்தத்துடன் என்னை அழைக்க வந்துவிடுவார் அப்பா.  இருட்டில் குறுக்கே வரும் யானைகளையும் கரடிகளையும் தீப்பந்தத்தால் விரட்டிவிட்டுக்கொண்டெ வீடு திரும்புவோம்.  இப்படியான வாழ்க்கை எனக்குள் என்னென்னவோ செய்தன.  அவற்றைத்தான் எழுத்தில் வைக்கிறேன்.

* பள்ளி கலை நிகழ்ச்சிகளில் நீங்கள் எவ்வாறு பங்கெடுத்துக் கொண்டீர்கள்?


            நான் நல்லா பாடுவேன். என் குரல் இனிமையைக் கேட்டுத்தான் தேன்மொழி என்று அழைக்கத் தொடங்கினார்கள்.  பின்னாளில் அதுவே நிலைத்துவிட்டது.  ரோஸ்லின் ஜெயசுதா என்ற இயற்பெயர் மறைந்துவிட்டது.  அந்த வயதில் என் அறிவுக்கு எட்டியபடி கதைகள் எழுதி நாடகங்கள் இயக்கினேன்.  நானும் நடித்தேன்.

* திரையுலகில் பிரவேசிப்பதற்காக அப்போதே தயாராகிக் கொண்டிருந்திருக்கிறீர்கள்?

         பள்ளி நாட்களில் எனக்கு சினிமா பற்றிய பரிட்சயமே இல்லை.  பல மைல் கடந்து போய் சினிமா பார்க்கும் பழக்கம் எல்லாம் மணல் ஆற்றில் இல்லை.  அவ்வப்போது நடக்கும் தெருக்கூத்து, தெருநாடகங்கள்தான் எனக்குள் கலையார்வத்தை கண்சிமிட்ட வைத்தன.  பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை சினிமா பார்த்தது கிடையாது. 

அந்த வயதில் சினிமா பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன்..அவ்வளவுதான்.  சினிமா பற்றியே அறியாமல் எப்படி அதன் மீது கனவு காண முடியும்.

* பின்பு எப்போதுதான் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்.  திரையுலகில் பிரவேசிக்க வேண்டும் என்று எப்போது தீர்மானித்தீர்கள்?

          நர்சிங் படிப்பிற்காக மதுரையில் தங்கியிருந்த போதுதான் சினிமா பார்த்தேன்.  நான் பார்த்த முதல் சினிமா மண்வாசனை.   சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஏழு படங்கள்தான் பார்த்தேன்.  சினிமாவுக்குள் வந்தபிறகுதான் தினம் இரண்டு படங்களாவது பார்த்துவிடுகிறேன்.  உலகப்படங்கள் அனைத்தையும் பார்த்து வருகிறேன்.  அதிகமாக பார்ப்பது ஈரான் படங்கள்.

            96 - ல் மதுரையில் நர்சிங் படிப்பை முடித்தேன். அப்போதே சென்னை அப்பல்லோ மருத்துவமணையில் வேலை கிடைத்தது. 

அங்கே பணி புரிந்துகொண்டே சிற்றிதழ்களில் கவிதைகள்,சிறுகதைகள் எழுதிவந்தேன்.  என் கவிதைகளை வாசித்த கவிஞர் அறிவுமதி அவர்கள் சிற்றிதழ் ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார்.  இதைக் கேள்விப்பட்ட நான் அவரை நேரில் சந்தித்தேன்.  என் கவிதைகளை வாசித்த அவர் ’இசையில்லாத இலையில்லை’ என்ற எனது முதல் கவிதை தொகுப்பு வெளிவர உதவினார்.  அந்த தொகுப்பை பாரதிராஜா அவர்கள் வெளியிடவும் உதவினார்.  

           புத்தக வெளியீட்டின் போது பாரதிராஜா அவர்கள், உன் கவிதைகளை படித்தேன். கலோக்கியல் லாங்வேஜ் நல்லாயிருக்கு.  நான் கூட மண்வாசனையில் இப்படி பண்ணவில்லை.  நான் எடுக்கவிருக்கும் ’ஈரநிலம்’ படத்திற்கு நீதான் வசனம் எழுத வேண்டும் என்று சொல்லி என்னை அதிர வைத்தார்.   நான் சினிமாவிற்கு வரவேண்டும் என்று நினைத்தது கூட இல்லை என்று மறுத்தேன். அதனாலென்ன இப்போது நினைத்துக்கொள் என்றார்.   

            நான் எழுதிய வசனவரிகள் அவரை மேலும் ஈர்த்துவிட...  எனக்கு பாடல் எழுதும் வாய்ப்பையும் கொடுத்தார்.  அதன் பிறகான சினிமா ஈர்ப்பினால் அவரிடமே உதவி இயக்குனராக சேர்ந்து கொண்டேன்.      
           
*  நீங்கள் திரைப்படத்துறைக்கு வந்ததை வீட்டினர் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?


         ரொம்ப மோசமானது;  ரொம்ப நல்லது என்று சினிமாவை பற்றி இரு வேறு கருத்துக்கள் உண்டு.  இதை சுட்டிக்காட்டிய என் அப்பா, உன் மீது நம்பிக்கையிருக்கு.  நம்பிக்கையானவர்களை மட்டும் நீ தேர்ந்தெடுதுக்கொள்.                                

          ஐந்து பெண் பிள்ளை, ஒரு ஆண் பிள்ளை பெற்றேன்.  உன் ஒருத்தியால்தான் எனக்கு பேரும் புகழும் கிடைக்கும் என்கிற நிலைமை இருக்கு. அப்படியிருக்க நீ தயங்காதே என்று அப்பாதான் எனக்கு தைரியமூட்டினார். 


 *  அப்பா..அப்பா.. என்று அப்பாவைப்பற்றியே நீங்கள் சொல்வதன் மூலம் அவருடன்தான் அதிகம் நெருங்கியிருந்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. அப்பா செல்லமா?

           ஐந்து பெண் குழந்தைகள் பெற்றால் அரசனும் ஆண்டியாகிவிடுவான் என்பார்கள். (பெரிதாக சிரித்து விட்டு) எங்களை வளர்க்க எத்தனை சிரமப்பட்டிருப்பார்.  அது மட்டுமல்ல.  அப்பா ஒரு கம்யூனிஸ்ட்.  அவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக தெரியும்.  அந்த வித்தியாசத்தால் அதிகம் ஈர்க்கப்பட்டேன்.  அதனால்தான்  அவருடனான பகிர்தல் அதிகமானது.  எதையும் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பது..எழுத்துலகின் மீதான ஆர்வம்..என்பதெல்லாம் இருந்ததால் அப்பாவும் என்னிடம் அதிகம் நெருங்கியிருந்தார்.   

ஆறு பிள்ளைகளில் நான் கடைக்குட்டி. அதனாலும் அப்பா என்னிடம் அதிகம் பிரியம் வைத்தார்.  அம்மா நர்சிங் படித்திருந்தாலும் வேலைக்கு போகவில்லை. மேகமலை டீ எஸ்டேட்டில் பீல்டு ஆபிஸராக இருந்து கொண்டேதான் எங்களையெல்லாம் அப்பா படிக்க வைத்தார்.  தேன்மொழி என்ற என் பெயருக்குப் பின்னால் அப்பாவின் பெயரையும் சேர்த்துதான் தேன்மொழிதாஸ் ஆனேன்.

 *  இசையில்லாத இலையில்லை கவிதை தொகுப்பிற்கு பிறகு ’அனாதிகாலம்’,  ’ஒளியறியாத காட்டுக்குள்’ என இரு தொகுப்புகள் கொண்டு வந்தீர்கள்.   அதன் பிறகு ஏன் நீண்ட இடைவேளை?

           சிற்றிதழ்களில் நான் எழுதிய இருபது சிறுகதைகளையும் தொகுத்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிடவிருக்கிறது. நான் வாழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அனுபவங்களைக் கொண்டு... நாவல் ஒன்று எழுதிவருகிறேன்.  அப்புறம் கவிதை தொகுப்பு ஒன்று.  இவையெல்லாம் விரைவில் வெளிவரவிருக்கின்றன. 

சினிமாவிலும் கவனம் செலுத்தி வருவதால்தான் இத்தனை பெரிய இடைவெளி.  ஈரநிலம் படத்திற்கு பிறகு கண்களால் கைது செய் படத்தில் பணிபுரிந்தேன்.  அப்புறம் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் வரலாறு படத்திலும் பணிபுரிந்தேன்.
 
சுகாசினி அவர்களுடன் இணைந்து ’காய்ச்சமரம்’ என்ற குறும்படம் இயக்கினேன். அவருடன் இணைந்து நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்தேன்.  தவமாய் தவமிருந்து, கூடல்நகர் உட்பட நிறைய படங்களுக்கு பாடல்கள் எழுதிகொண்டே கனாக்காணும் காலங்கள், காதலிக்க நேரமில்லை தொலைக்காட்சி தொடர்களுக்கும் பாடல்கள் எழுதினேன்.

தமிழ் பாப் பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களும் எழுதிவந்தேன்.  இப்போது தெற்கத்திப்பொண்ணு தொலைத்தொடருக்கு வசனம் எழுதி வருகிறேன்.  இப்படி எல்லா வற்றிலும் கவனம் செலுத்திவருகிறேன்.  குறிப்பாக கவிதை தொகுப்பு என்று மட்டும் எடுத்துக்கொண்டிருந்தால் இந்நேரம் தொகுப்புகளாக குவித்திருப்பேன்.


 *  தெற்கத்திப்பொண்ணு தொலைத்தொடரில் உங்களின் பங்களிப்பு வசனம் மட்டும்தானா?

          வசனத்தோடு நின்றுவிடவில்லை.  அத்தொடரின் இடையிடையே வரும் சின்னச்சின்ன பாடல்களையும் எழுதி வருகிறேன்.  இதுவரை இருபது பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த தேனி மாவட்டத்திலேயே தொடர்ச்சியாக தொடரின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.  படக்குழுவினருடன் இருந்து உடனுக்குடன் வசனம் எழுதிக்கொடுத்துவருகிறேன்.   இது தவிர இயக்குநர் அவதாரத்திற்காக ஐந்து கதைகள் தயார்செய்து வைத்திருக்கிறேன்.

 *  எந்த மாதிரியான திரைப்படங்களை இயக்குவதாய் எண்ணம் வைத்திருக்கிறீர்கள்?

              உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கவே விரும்புகிறேன்.  கமர்ஷியல் சினிமா பண்ணுகிற எண்ணம் இல்லை.  கதாநாயகர்களுக்காக கதை பண்ணுகிற எண்ணமும் இல்லை.

*  ஆண்களே அதிகம் நிரம்பியிருக்கும் இந்த சினிமாத்துறையில் சுதந்திரமாக செயல்பட முடிகிறதா?

              இங்கே பெரும்பாலான ஆண்களின் அனுகுமுறை மோசமாயிருக்கு.   வாய்ப்பு கேட்டுப்போனால் கையைப் பிடித்து இழுக்கிறானுங்க.  ஆடையைப் பிடித்து அவிழ்க்கிறானுங்க.  இதனாலேயே நான் வாய்ப்பு தேடிப்போவதில்லை.  வரும் வாய்ப்புகளையும் நல்லதா கெட்டதா என்று தீர்மானித்துதான் ஒப்புக்கொள்கிறேன்.

           ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்க வேண்டிய நான் இதுவரை ஐம்பது பாடல்கள்தான் எழுதியிருக்கிறேன்.  அதற்கு காரணம் இந்த பிரச்சனைதான்.     நான் மட்டும் ஆணாகப் பிறந்திருந்தால் எத்தனையோ பாடல்கள் எழுதியிருப்பேன். எத்தனையோ திரைப்படங்களை இயக்கியிருப்பேன்.      இந்தப்பிரச்சனையால்தான் பெண் படைப்பாளிகள் சினிமாவுக்குள் வரத்தயங்குகிறார்கள்.  வந்தவர்களும் திரும்பிப்போய்விடுகிறார்கள்.         

*  ஆண்களின் இந்த அணுகுமுறையால்தான் சினிமாவில் பெண் கவிஞர்கள் பெருமளவில் இல்லையா.  பெண் இயக்குநர்கள் நிலைத்து நிற்காமல் போவதற்கும் இதுதான் காரணமா?

           பாட்டெழுதப் போகும்போது இசையமைப்பாளனும் இயக்குநர் ஜென்மங்களும் நடந்துகொள்கிற அதே மோச நிலையைத்தான்  படம் இயக்க தயாரிப்பாளரைத் தேடிப்போகும் போதும் சந்திக்க வேண்டியிருக்கு. ஐந்து கதைகள் வைத்திருக்கிறேன்.  ஆனால் டைரக்‌ஷன் பண்ணுவதற்கு பயமாயிருக்கு.

        பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா. அதுவும் என்னை மாதிரி அடி மட்டத்திலிருந்து வரும் பெண்களுக்கு சினிமா சரிப்பட்டு வராது என்று தெரிந்தும்,  எதற்கு வம்படியாக இந்த சினிமாவை பிடித்துக்கொண்டு தொங்கவேண்டும்  என்று கூட நினைக்கிறேன்.  ஆனால் தீர்மானிக்க விடாமல் தடுக்கிறது சினிமா தாகம்.

        கொஞ்ச காலத்திற்கு என்னை ஆணாக மாற்றிவிட மாட்டாயா என்று கர்த்தரிடம் பிரார்த்தனை செய்கிறேன்.  அது நடக்கவேயில்லை.   சில நேரங்களில் வயதான பிறகு வந்து டைரக்‌ஷன் பண்ணலாம்.  இளமை கழியும் வரை பொருத்திருக்கலாம் என்று நினைத்தாலும் மனதால் சமாதானம் அடைய முடியவில்லை.

நல்லவர்கள் இருந்ததால்தானே இதுவரை சமாளித்து இருக்கிறேன்.  அப்படிப்பட்ட நல்லவர்களும் இருப்பதால் எப்படியும் தப்பிக்கலாம்..நினைத்ததை முடிக்கலாம் என்ற நம்பிக்கையும் ஒருபுறம் இருபதால்தான் திரையுலகுடன் எனக்கான தொடர்பு இன்னும் இருக்கிறது.

            பெண் கவிஞர்கள் அதிகம் திரையுலகில் இல்லாமல் இருப்பதற்கும் பெண் இயக்குநர்கள் நீடிக்காமல் போவதற்கும் திறமையின்மை என்று கூட சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.  இப்படிப்பட்ட பிரச்சனையால்தான் இந்த நிலை என்று அவர்களுக்கு தெரியவில்லை போலும். ஆண்களைவிட பெண்களுக்குத்தான் ஆளுமை அதிகம்.  தாய்மையான இதயமும் உண்மையான உணர்வும் இருப்பதால் பெண்களால் சிறந்த படைப்புகளைத் தர முடியும். 

        பொதுவில் நீங்கள் பார்த்தால் பெண்கள்தான் நிலையானவர்கள்.  நிலையான நிலத்திற்கு பூமாதேவி என்று பெண்னைத்தான் குறிக்கிறார்கள்.  வாயுபகவான் என்று குறிப்பிடுவதன் மூலமே ஆண்கள் நிலையில்லாதவர்கள் என்பது புரியும்.
         
              பொதுவாகவே உங்களுக்கு ஆண்களின் மீது அதிக வெறுப்பு இருக்கிறது.  தோல்வியில் முடிந்த உங்கள் காதல் திருமணம்தான் இதற்கு காரணம் என்று சொல்லலாமா?


       எதனோடு எதனை முடிச்சு போடுகிறீர்கள். நான் சொல்ல வந்தது வேறு. நீங்கள் பாதையை மாற்றிவிட்டீர்கள்.  காதலித்து தாலி கட்டிய அவனே தாலி கட்டவில்லை என்றுவிட்டான்.   வேறு ஒரு பெண்னையும் மணமுடித்து விட்டான். அவனையும் இந்த சமூகம் மனிதனாக அங்கீகரித்திருக்கு.  எல்லாம் முடிந்துவிட்டது...(சிறிது இடைவெளி விட்டு)    அவனைப் பற்றி பேசுவதற்கு இனி ஒன்றும் இல்லை.  ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.  காயப்படுத்தும் போது மட்டுமே பெண் காளியாகிறாள்.

        மற்றபடி நான் அனைவரின் மீதும் அன்பு காட்டுவேன்.  எந்த ஆணிடமும் தாய்மை உணர்வுடன்தான் அணுகுவேன்.  சின்ன வயதிலிருந்தே எனது இந்த செயலைக் கண்ட அப்பா, என்னை கன்னியாஸ்திரி ஆக்கனும் என்று விரும்பினார்.  ஆனால், இலக்கியம் என்னை வேறு பாதைக்கு இழுத்து வந்துவிட்டது.

       என்னை சுற்றியிருக்கும் ஆண்களை தீயவழிகளில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்வேன்.  என்னுடன் பழகுகிறவர்கள் என்னை அம்மான்னு கூப்பிடுவார்கள்.  இல்லை அக்கான்னு கூப்பிடுவாங்க.  இயக்குநர் சேரன் என்னை அம்மான்னுதான் கூப்பிடுவார்.  இதையெல்லாம் கவனிக்கும் குருநாதர் பாரதிராஜா அவர்கள், நீ கன்னியாஸ்திரி ஆகியிருக்க வேண்டியவள் என்று அடிக்கடி சொல்வார்.


*  எதிர்கால  வாழ்க்கையை எப்படி திட்டமிட்டிருக்கிறீர்கள்.  படைப்பாளி என்பதை தவிர்த்து வேறு எப்படியாவது உங்களை வெளிப்படுத்திக்கொள்ள விருப்பம் இருக்குதா?

         தலித் சமூகத்திற்காக நான் ஏதேனும் செய்துவிட்டுப் போக விரும்புகிறேன்.  அந்த சமூகத்திற்காக நிறைய போராட வேண்டியிருக்கு.  அதற்காக நான் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.   டைரக்‌ஷனில் இறங்கி பணம் சம்பாதிக்கனும்.  அந்த பணத்தைக் கொண்டு பெரிய இடம் ஒன்று வாங்கி குட்டி இயற்கையை உருவாக்கனும்.  பறவைகள், சிறு விலங்குகள் என்று உலாவவிடனும்.  அவை நடுவில் நான் வாழனும். 

          இவற்றுக்கு முன்பாக ஒன்றை செய்ய விரும்புகிறேன்.  என் அன்பை வெளிப்படுத்துவதற்கும்  எனக்கான அன்பை பெறுவதற்கும் ஒரு குழந்தை தேவை என்று நினைக்கிறேன்.  அதற்காக ஒரு குழந்தையை தத்தெடுக்கப்போகிறேன்.  என் தனிமையின் வெறுமையை நிரப்பும் அந்தக் குழந்தை எங்கேயிருக்கும். எப்படியிருக்கும்;  யாருக்குத்தெரியும்”   என்றுவிட்டு பேச்சை நிறுத்தியவர், சிறிது இடைவெளிக்குப்பிறகு  “பார்க்கலாம்”  என்றார்.

          அந்த பார்க்கலாம் என்ற வார்த்தை கனத்த இதயத்திலிருந்து வந்தது என்பது புரிந்தது.  அந்த கனத்த வார்த்தை,

              ”என்னைத்தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
            உன்னைத்தேடி வாழ்வின் மொத்தம் அர்த்தம் தருவேன்
            செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
            செய்தியனுப்பு

             என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும்
             உன்னிடத்தில் கொண்டுவர தெரியவில்லை
             காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
             சொல்லியனுப்பு

             கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
             மழையில் விடுகிறேன்
             கனவில் மட்டும் காதல் செய்து
             இளமை கொல்கிறேன்”

                                 --என்று அவர் எழுதிய பாடலை நினைவுபடுத்தியது.

நேர்காணல் :  கதிரவன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]
Name : senapathiraj Date :1/5/2014 1:47:45 PM
உண்மை !!....நானும் சினிமாத்துறையில் உதவி இயக்குனராக பணிபுரிய மூணு நாலு வருடங்கள் போராடிவிட்டு தோல்வியோடு திரும்பியவன் .தேன்மொழி சொல்வது உண்மை .சினிமாவில் பெண்கள் வாய்ப்பு கேட்டு போனால் கையை பிடித்து இழுக்கும் காமுகர்கள் அதிகம்.பசுத்தோல் போர்த்திய புலிகள்தான் இங்கு நிறைய பேர் .பெண்களுக்கு இந்த சினிமா களம் பாதுகாப்பில்லை.உண்மையான மனசாட்சி உள்ள எந்த சினிமாக்காரன் ஆனாலும் இதை மறுக்க முடியாது .இங்கு நல்லவர்களும் சிலர் உள்ளனர் .அவர்களால்தான் இங்கு நேர்வழியில் செல்ல நினைக்கும் பெண்கள் ஓரளவு பாதுகாப்பாக உள்ளனர் .துணிச்சலுடன் சினிமா களத்தில் போராடும் சகோதரி தேன்மொழி தாஸ்க்கு வாழ்த்துக்கள் !....
Name : dr.anbushiva Date :10/7/2013 1:58:27 PM
மிக நன்று
Name : sabapathi Date :8/6/2013 8:40:15 PM
குட், ஆல் தி பெஸ்ட்