நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :8, அக்டோபர் 2012(19:27 IST)
மாற்றம் செய்த நாள் :8, அக்டோபர் 2012(19:27 IST)மாநிலம் சார்ந்த இலக்கியங்கள்தான்
 இப்போது முன்னெடுக்கப்படுகின்றன

- தமிழச்சி தங்கபாண்டியன்முனைவர் பட்டத்திற்காக செய்த புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்களின் படைப்புகள் குறித்த ஆய்வை தனிப்புத்தகமாக கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன். 

  புழுதிக்காற்று வீசும் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது கடற்கரை காற்று வீசும் சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார்.
 
ஒரு கர்ப்பிணிப்பெண் எடுத்த வாந்தியை எத்தியோப்பிய குழந்தை எடுத்து உண்டதை தொலைக்காட்சியில் பார்த்தபிறகும்,  அன்றைய இரவும் கணவனோடு சந்தோசமாக இருக்க முடிந்தபோதுதான் முழுவதுமாக நான் நகரவாசியானேன் என்பதை உணர்ந்தேன் என படைப்புகளின் மூலம் கிராமத்திற்கும் - நகரத்திற்குமான வேறுபட்ட வாழ்க்கையை வெளிப்படுத்திவருகிறார்.

மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும்,  முன்னாள் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியும், தமிழ்நாடு காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரி சந்திரசேகரின் மனைவியுமான தமிழச்சி,   ராணிமேரி கல்லூரியில் பன்னிரண்டு ஆண்டுகள் ஆங்கிலப்பேராசிரியராக பணிபுரிந்தவர்.  கவிதை,கட்டுரை,அரங்கசெயல்பாடு,அரசியல் என பல்வேறு தளங்களில் இயங்கிவருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்.

இலங்கைத்தமிழர்களின் ஆங்கிலப்படைப்புகள் குறித்த ஆய்வை ஆங்கிலத்தில்தான் புத்தகமாக கொண்டுவருகிறீர்களா?

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் ஆங்கிலப்படைப்புகளில் அவர்தம் அலைந்துழல்வு உணர்வு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டேன்.   அந்த ஆய்வை தனிப்புத்தகமாக கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறேன்.  புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் ஆங்கில படைப்புகளைப்பற்றிய எனது ஆங்கில ஆய்வை  முதலில் ஆங்கிலத்தில்தான் புத்தகமாக கொண்டுவருவேன்.  பின்னர்தான் மொழிபெயர்த்து தமிழில் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறேன்.

மொழிபெயர்ப்பில் இறங்கும்போதுதான் நமது தாய் மொழியிலும், அயல்மொழியிலும் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது.   பி.எச்.டி. படித்திருக்கிறேன்.   எனக்கு கொஞ்சம் தெரியும் என்று நினைத்துக்கொள்ளலாம்.  ஆனால் அதுவல்ல.  நான்கு சொற்கள், ஐந்து சொற்களுக்குள் அந்த வேறுபாடு கண்டுபிடிக்கப்படும்போது, இத்தனை நாளும் மொழிப்புலமை எவ்வளவு குறைவாக இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.  மொழி பெயர்ப்பின்போதுதான் நமக்கு எவ்வளவு மொழிப்புலமை இருக்கிறது என்பது தெரிகிறது.

மொழிப்பெயர்ப்பில் இருந்து இப்போது மொழிஆக்கம் வந்திருக்கிறது.  ஒரு கவிதையை வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்த்தால் அது டிரான்ஸ்லேஷன்.  (translation)  அது உயிர்ப்புடன் இருக்காது.  மொழி ஆக்கம் என்பது,  ஒரு கவிதையின் ஆன்மாவை மட்டும் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கான ஒரு தளத்தில் கொண்டுபோவது.  மொழிபெயர்ப்பு என்பது மூல ஆசிரியருக்கு செய்கின்ற துரோகம் என்பார்கள்.  நான் எழுதிய கவிதைகளை நானே மொழிபெயர்க்கும்போது அந்த மூலம் அப்படியே வரும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் ஒத்திப்போடுகிறேன்.வட்டார வழக்கிலேயே எழுதி வருவதால், பிறமொழிகளில் உங்கள் கவிதைகளை  மொழிபெயர்ப்பதில் சிக்கல் உண்டாகிறது என்ற விமர்சனம் வந்திருக்குமே?

வட்டார வழக்கில் எழுதுவதால் பிறமொழிக்கு  மொழிபெயர்ப்பதில் சிரமம் இருக்கும் என்பதை உணர்கிறேன்.  என்னுடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் சிரமம்.  பாம்படம் என்பதற்கு  கீழே ஃபுட் நோட் எழுத வேண்டியது இருக்கும்.  இப்படித்தான் ஃபுட் நோட் கொடுத்து இப்போது கொண்டு செல்கிறார்கள். 

  மாநிலம் சார்ந்த இலக்கியங்கள்தான் இப்போது முன்னெடுக்கப்படுகின்றன.  இதுதான் இப்போது உலகளாவிய அளவில் பேசப்படுகிறது. ஆங்கில இலக்கியம்தான் உயர்ந்தது என்ற காலம் முடிந்து போய்விட்டது.  நாங்கள் இப்போது எங்களுடைய மொழியில், எங்களுக்கான விசயத்தை எழுதுகிறோம். 

கொஞ்சம் கவனத்தை ஈர்க்கலாம் என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதலாமே தவிர,  தமிழ்தான் உலக அளவில்  பெரிதும் பேசப்படுகிறது.    வெளிநாடுகளுக்கு நான் செல்லும் இடங்களில் எல்லாம்,  எழுத்துவடிவில், இலக்கிய வடிவில் 3500 ஆண்டுகளூக்கு முன்பு தமிழில் சங்கம் இருந்தது என்று அறியும்போது ஆச்சரியப்படுகிறார்கள்.  அவர்களுக்கு பேச்சுமொழியே அதன்பிறகுதான் வந்திருக்கும்.  இன்றளவும் தொல்காப்பியத்தை மிஞ்சிய விமர்சன நூல் உலகளவில் எதுவுமில்லை. 


விமர்சனங்களையும், வாசகனையும் கருத்தில் கொண்டு என் கவிதைத்தளம் இயங்கு வதில்லை என சொல்லி வருகிறீர்களே?

விமர்சகன், வாசகனை வைத்து ஒரு கவிதை எழுத முடியாது.  முழுக்க அது அகம் சார்ந்த ஒரு விசயம்.  ஆனாலும் புறத்தாக்கங்களும் அவசியம்.   பொதுவாக கோட்பாடுகளுக்குள் கவிதையை தேடாமல் வாழ்க்கை அனுபவங்களுக்குள் கவிதையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.   எப்போதும் இதே நிலைப்பாட்டுடன் உறுதியாக இருப்பேன்.

 என் மனப்போக்கின் வடிவமாக கவிதை அது போக்கில் அமைகிறது. அருமையான சாப்பாட்டை செய்து, குழந்தை அவற்றை ருசித்து சாப்பிட்டுவிட்டால் தாய் மகிழ்ச்சி அடைவாள். ஆனால்,  குழந்தை ருசிக்கவில்லையென்றாலும் குழந்தைக்கான அத்தனை தயாரிப்புகளோடும்தான் தாயின் கவனம் இருக்கும். படைப்பும் அப்படிப்பட்டதுதான்.   இது மனம் சம்பந்தப்பட்ட ஒரு விசயம். அதை நான் ஏதோ ஒரு தளத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.   அது சேர்ந்தால் அதீத மகிழ்ச்சி. சேரவில்லையென்றாலும் அதனால் ஒன்றுமில்லை. 


உங்கள் கவிதைகளுக்கு கோட்பாடு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்கள்.  முன்னோடி உண்டா? இல்லை சுயம்புவா?

இப்போது வரும் சில கவிஞர்கள் நாங்கள் சுயம்புவாக தோன்றியவர்கள்.  நாங்கள் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் கவிதையை எழுதுகிறோம் என்று சொல்லுகிறார்கள்.  ஆனால் சங்கத்தில் இருந்துதான் எல்லாரும் எழுதுகிறார்கள்.  சங்கத்தை மிஞ்சிய எந்தக்கவிதையையும் நான் எழுதிவிடவில்லை என்று நான் நினைக்கிறேன்.

 சங்கப் பெண்பால் புலவர்கள் எழுதிய எந்தக்கவிதையையும் தமிழச்சியாகிய நான், எழுதிவிடவில்லை.  எழுதிவிட முடியாது என்பதுதான் என்னுடைய முடிவு. அதை நோக்கிய பயணம்தான் என்னிடம் இருக்கிறது.

  சங்கத்தில் நம்முடைய இனம் சார்ந்த விசயம், பண்பாடு சார்ந்த விசயம்,  அகம் -புறம் ஆகட்டும்,  அதில் இருக்கிற அந்த சிக்கல், இப்போது இருக்கிற சமகால அவஸ்தையை அப்படியே கண்முன்னால் நிறுத்துகிறது அந்த மொழிக்கட்டு.   அந்த மொழி கட்டும், நேர்த்தியும் இன்று வரைக்கும் எனக்கு வரவில்லை என்று நினைக்கிறேன்.

கவிதைகளை பொருத்தவரை முன்னோடி என்று எனக்கு யாரும் கிடையாது.   ஆனால் பாதிப்பு இருக்கிறது. அப்துல்ரகுமானின் ‘பால்வீதி’யில் எத்தனையோ கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்.   அதில் நானும் ஒருத்தி.   ’வேலிக்கு வெளியே நீளும் என் கிளைகளை வேண்டுமானால் வெட்டலாம் வேலிக்குக் கீழே நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்’ என்கிற அப்துல்ரகுமானின் வரிகள்,  ’விரல்கள் ஜன்னல் கம்பிகளை பிடித்திருந்தாலும் விழிகள் என்னவோ நட்சத்திரங்களோடுதான்’ என்கிற மு.மேத்தாவின் வரிகள்,  ’நீ என்னை ஆயிரம் முறை பார்த்தாலும் நான் நேசிப்பது எல்லாம் ஆயிரத்தில் ஒன்று’ என்கிற மீராவின் வரிகள்,   ’பத்தாவது முறையாக கீழே விழுந்தவனுக்கு முத்தமிட்டுச் சொன்னது பூமி ஒன்பது முறை எழுந்தவனல்லா நீ’ என்கிற ஈரோடு தமிழன்பன் வரிகள் எல்லாம் என்னை மிகவும் பாதித்தன. வைரமுத்துவின் ‘தோழிமார் கதை’ மிக நீண்ட கவிதை.  மிக நீண்டதொரு பாதிப்பைத் தந்த கவிதை.

 எல்லாமே ஒரு கணம்தான் தாமதப்படுகிறது என்கிற மனுஷ்யபுத்திரனின் கவிதை என்னை மிகவும் ஈர்த்தது.  நன்கு வாழ்ந்து முடிந்த வீட்டை இடிக்கும்போது உற்றுக்கேளுங்கள்.. கொல்லையில் பெண்களுடைய விம்மல் ஒலி!  என்கிற மகுடேஷ்வரனின் கவிதை பெரிதும் ஈர்த்தது.

 ஆத்மாநாம் கவிதைகள்,நகுலன் கவிதைகள் என்னை மிகவும் பாதித்திருக்கிறது.  ப்ரமிள் மிகப்பெரிய ஆதர்ஸம் என்று சொல்லலாம்.  வித்யாசங்கர், பா.சத்தியமோகன், லஷ்மிமணிவண்ணன், யவனிகாஸ்ரீராம், இரா.மீனாட்சி,சுகந்திசுப்பிரமணியம், ஆகியோருடைய கவிதைகள் என்னை மிகவும் பாதித்திருக்கிறது.  இதற்கெல்லாம் முன்பே ஆண்டாள், வெள்ளிவீதியார், ஒளவையார் ஆகியோரின் படைப்புகள் என்னை மிகமிக பாதித்திருக்கிறது.   அந்த பாதிப்புகளில் இருந்துதான் எல்லா படைப்புகளும் வருகின்றன.

 பல படைப்பாளிகளின் தாக்கத்தில்தான்  ’மாரி’ நான் முதல் கவிதை எழுதினேன்.  அதில் துவங்கிய இலக்கிய தாகம், கல்லூரியில் ‘அருவி’என இதழ் கொண்டு வரும் அளவிற்கு வேகமெடுத்தது.   இன்றளவும் தொடர்கிறது.


 ‘அருவி’ இதழில் உங்களின் பணி என்னவாக இருந்தது?

அப்போது, இலக்கிய இதழாக சிவகங்கையில் இருந்து மீராவின் ’அன்னம்’இதழ் வந்துகொண்டி ருந்தது.  மாலனின் ‘திசைகள்’வந்தது. அந்த காலகட்டத்தில், மதுரை தியாகராயர் கல்லூரியில் நான் ஆங்கிலத்தில் முதுகலையும், எம்.பில் படிப்பும் படித்துக்கொண்டிருந்தேன்.  ஆனாலும் அப்போது  தமிழுக்கான, இலக்கியத்துக்கான ஒரு உரமாக இருந்தது அந்தக்கல்லூரி.  விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் மட்டும் இணைந்து கொண்டுவந்த இலக்கிய இதழ்,  ‘அருவி’.   

 ஒரு நேர்த்தியோட, ஜனரஞ்சகமான விசயங்கள் இல்லாமல் ஒரு நல்ல இலக்கிய ரசனை என்றால் என்ன?  செவ்வியல் இலக்கியத்தை எப்படி அறிமுகப்படுத்துவது? அதே சமயம் வெறும் மேலோட்டமான, வெகுஜன ரசனை, துணுக்குகள்,நகைச்சுவை,காதல் பார்வைகள் தவிர்த்து சமூகம் சார்ந்த சிந்தனை, பெண்களுடைய விசயம், உள்ளிட்டவை தாங்கி, மாணவிகள் மாத்திரம் மட்டுமே பங்களித்த இதழ் அது.  அந்த காலகட்டத்தில் மொத்தமாக கல்லூரிக்கு என்று ஒரு இதழ் வரும்.  கல்லூரிப்பெண்களுக்கென்று இந்த இதழ்தான் வந்தது.

முதல் இதழில் நான், தி.ஜானகிராமன், கல்கி ஆகியோரை எல்லாம் ஒப்புநோக்கி  ஒரு விமர்சனக்கட்டுரை எழுதியிருந்தேன்.   ’அசுனப்பறவை’ என்று அந்த இதழில்தான் என் முதல் சிறுகதை வெளிவந்தது.  

எனக்கு கல்லூரிப்பேராசிரியராக இருந்தவர் சுகுமாறன்.  அப்போதே நவீன இலக்கியத்தில் பரிட்சயம் இருந்த தமிழ் இலக்கிய ஆர்வலர். அவர் அருவி இதழைப்படித்துவிட்டு,  ‘’கண்டிப்பாக நீ எழுதலாம்.  எழுதுவதற்கான, இலக்கியம் சார்ந்து இயங்குவதற்கான அத்தனை உரமும் உனக்கு இருக்கு’’ என்று பாராட்டினார். தற்போது நீங்கள் வெளியிட்டிருக்கும் ‘கவிதையும் காலமும்’ தொகுப்பிற்கு, அப்போதே ‘அருவி’ இதழின் விமர்சனக்கட்டுரை ஒரு முன்னோட்டமாக இருந்திருகிறதே?  இந்த விமர்சனப்பார்வை அப்போதே உங்களுக்குள் எழுந்தது எப்படி?

அப்படியும் சொல்லலாம்.  முன்னோட்டமாகத்தான் இருந்திருக்கிறது.  எழுத்தாளர் இமயம் என் நண்பர். அவர் எப்போதும் என் நலத்தில் அக்கறை கொண்டவர்.  அவர்தான் இப்படி ஒரு தொகுப்பு கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார்.  

ஒரு படைப்பாளி தன்னைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பது இப்போது அருகி வருகிறது.  தன்னைவிட சிறந்த படைப்பாளிகள் கிடையாது என்று அவர்களுக்குள்ளாகவே நினைத்துக்கொள்கிறார்கள்.  இது மாதிரி ஒரு விமர்சனக்கட்டுரைகள் தொகுப்பு வெளிவரும்போது,  இது மற்றைய படைப்பாளிகள் பற்றிய விமர்சனக்கட்டுரைகள் வெளிவருவதற்கு உதாரணமாக இருக்கும் என்று விரும்பினார்.  அதன்படியே ’கவிதையும் காலமும்’ வெளிவந்திருக்கிறது. மனுஷ்யபுத்திரன் இந்த தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.

பொதுவாக நான் ஒரு ஆய்வு மாணவி.  என்னுடைய படிப்பு என்பது எதையும் விமர்சன நோக்கோடு பார்க்கப்பட்டது.   எதையுமே கறாரான விமர்சனத்தின் மூலமே அணுகவேண்டும் என்று எனது பேராசிரியர்களும் எனக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.  எனது பேராசிரியர் டிவி.சுப்பாராவ், எனக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்ற, விவாதிக்கின்ற பக்குவத்தை, தேவையினை மிகவும் வலியுறுத்தியவர்.

இந்த புத்தகம் வந்தால் விமர்சன நோக்கோடு ஒரு படைப்பை எப்படிப்பார்க்கலாம் என்பதற்கு ஒரு தளமாக இருக்கும் என்று எனக்கும் தோன்றியது.  அது நிறைவேறியது.

கண்பார்த்து, முகம்பார்த்து பேசுகிற நிறைவை, வெள்ளைத்தாளின் கறுப்பு எழுத்துக்களால் தரமுடியாது என்று சொல்லிவருகிறீர்கள்.  நீங்கள் பேச்சாளராகவும் இருப்பதால் இப்படி சொல்லிக்கொள்கிறீர்களா?

 பேச்சைப்பற்றி சாக்ரடீஸ் சொல்லியிருப்பது பற்றி மிக சமீபத்தில் படித்தேன்.    பேச்சுக்குத்தான் நான் தகப்பன்.  எழுத்துக்கு நான் விலைமாதர் என்று சொல்லியிருக்கிறார்.  பேச்சுக்குத்தான் நான் தகப்பன் என்கிற பொறுப்பாளி.  எழுத்துக்கு நான் பொறுப்பாளி கிடையாது என்று முன்வைக்கிறார்.    பேச்சுதான் வலிமை வாய்ந்தது என்கிறார்.  பேச்சைத்தான் அவர் முதலிடத்தில் வைக்கிறார்.

பொதுவாக நம்முடைய இனக்குழு வாழ்க்கையே அப்படித்தான்.   உரத்துப்பேசுபவர்கள்தான் நாம்.  ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்னர்தான் லிப்ஸ்டிக் கலையாமல் பேச வேண்டும், பசிச்சாலும் ஒரு இட்லிக்கு மேல் சாப்பிடக்கூடாது என்கிற நாசூக்கு வந்தது.   மற்றபடி  கள்ளுண்டு, புலால் உண்டு, வேட்டையாடி, முத்துமாரியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து,  எல்லோரும் மொத்தமாக சேர்ந்து சத்தமாக பாடி,  சத்தமாக பேசிவருவதுதான் வழக்கம்.    எங்கள் ஊர் தெருவில்  ஒரு முனையில் இருந்துகொண்டு இன்னொரு முனையில் இருப்பவரிடம் சத்தம் போட்டு பேசுவார்கள்.  தோட்டத்தில் நின்றுகொண்டு ஏலேய் என்று உரக்க கூப்பிட்டுக்கொள்வார்கள்.  நான் அப்படித்தான் வளர்ந்தேன்.   

என்னைப்போன்ற ஆட்கள் என்ன நினைக்கிறோம் என்றால்,  வெறும் உணர்வைத்தூண்டுகின்ற அந்த பேச்சை விட,  உணர்வோடு, அறிவோடு சிந்திக்க வைக்கின்ற பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.      பக்கம் பக்கமாக வாசித்தாலுமே, இண்டு நிமிச பேச்சிலும் மக்களை ஈர்த்துவிட முடியும்.    ஐந்து பக்கங்களை வாசித்தால் அயர்வாக இருக்கும்.   அதை பத்து நிமிடங்கள் பேசினால் கூட,   உட்கார்ந்து கேட்டுக்கொண்டு இருக்கலாம்.  

பேசும்போது கண்களூடைய தொடர்பு இருக்கிறது.  உடல்மொழி இருக்கிறது.  அதனால்தான் பேச்சுக்கே என் முன்னுரிமை.

எழுத்தின் மூலமாகத்தானே தமிழச்சி தங்கபாண்டியன் நன்கு அறியப்பட்டிருக்கிறார்?

நான் முன்பே சொன்னேன். விமர்சனத்திற்கு உட்பட்டு என்னுடைய எண்ணங்கள் இல்லை.  நான் நினைத்ததை சொல்கிறேன்.பேச்சுக்கு தனிப்பட்ட ஒன்று இருக்கிறது.

நவீன கவிதைகளிலேயே நிலைத்துவிட்டீர்களே?  தமிழ் படித்திருந்தும் ஏன் மரபுக்க விதையை தவிர்த்தீர்கள்?

மரபின் அச்சில் இருந்துதான் புதுமையின் சக்கரம் சுழல்கிறது என்பதில் நம்பிக்கை உடையவள் நான்.  மரபைத் தெரிந்துகொண்டுதான் மரபை மீற வேண்டும் என்று நினைப்பவள் நான்.  நான் தமிழ் படித்தவள்தான்.  மரபு தெரியாமல் நவீனத்திற்கு வந்துவிடவில்லை.  மரபு தெரியாமல் அதை மீறினால் அதில் ஒன்றுமில்லை.  தெரிந்துவைத்திருந்து அதை மீறும்போதுதான் அழகு இருக்கும்.  மரபு பற்றி அறிந்து வைத்திருந்தாலும்,  இயல்பாக, ஏதுவாக, புதுக்கவிதையில் இருந்து நவீனகவிதைகள் வந்தது எனக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  சங்ககவிதைகளுக்கு அடுத்து இதில்தான் ஈடுபாடு இருந்தது.   அதனால்தான் மரபுக்கவிதைகள் எனக்குக் கைகூடவில்லை. 

ஆங்கில இலக்கியம் படித்திருந்தும், அதில் தேர்ச்சி பெற்றிருந்தும்,  ’தமிழச்சி’ என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டது ஏன்?

இப்போதும் மல்லாங்கிணற்றில் எனக்கு செமதின்னுதான் பெயர்.  அப்படித்தான் என்னைக் கூப்பிடுவார்கள்.  கவிதை எழுத வந்த அந்த சமயத்தில் சுமதி மணிமுடி எனும் கவிஞர், ‘கல்மரம்’எழுதிய வழக்கறிஞர் சுமதி ஆகியோர் இலக்கியப்பரப்பில் இருந்ததால் ஒரு புனைபெயர் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.  அப்போது,  தமிழ் கிராமம் சார்ந்த ஒரு பெயர் இருந்தால் நல்லாயிருக்கும் என்று ’தமிழச்சி’ என என்னுடைய பெயரை வைத்துக்கொண்டேன்.

என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘எஞ்சோட்டுப்பெண்’ணின்போதுதான் இந்த மாற்றம் நிகழ்ந்தது.    நான் எழுதியது எல்லாம் கவிதைகளா? அல்லது கதைப்பாடல்களா? என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது.  கவிஞர் அறிவுமதி அண்ணன்தான் தெளிவுபடுத்தி, தொகுத்து ’எஞ்சோட்டுப்பெண்’ வரக்காரணமாக இருந்தார். அறிவுமதி அண்ணன் இல்லையென்றால் அந்த தொகுப்பு வந்திருக்காது.

 ஆனால்,  எஞ்சோட்டுப்பெண்ணுக்கு முன்னே தமிழச்சி என்கிற பெயரில் முதன் முதலில்  ‘முரசொலி’யில் என் கவிதை வெளிவந்தது.  தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்ட சமயம் அது.  ‘எழுதுகோலை எடு தலைவா’ என ஒரு கவிதை எழுதினேன்.  அந்த கவிதைதான் தமிழச்சி என பெயர் தாங்கி முரசொலியில் பிரசுரமாயிற்று.    அதன் பின்னர் நெல்லை திமுக இளைஞரணி மாநாட்டில் தலைவர் கலைஞர்தான் என்னையும், என் குடும்பத்தையும் கவுரவப்படுத்தும் விதமாக தமிழச்சி தங்கபாண்டியன் என அழைத்தார்.   அதன் பின்னர் அதுவே நிலைத்துவிட்டது.

படைப்பு மொழி தாய்மொழியில்தான் வரும்.  கீழேவிழுந்தால் அம்மா என்றுதான் சத்தம் போடுவார்கள்.  மம்மீ என்று கத்த மாட்டார்கள்.  ஆப்பிரிக்க இனக்குழுவில் எழுதுபவர்கள் எல்லாம், அதை ஒரு பொலிடிகல் ஸ்டேட்மெண்ட்டாக முன்வைக்கிறார்கள்.  ஆங்கிலத்தில் எழுதக்கூடாது என்பதை முன்னிறுத்துகிறார்கள்.   மிகப்பெரிய ஆப்பிரிக்க எழுத்தாளர் ஒருவர் இப்போது ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு, தன்னுடைய இனக்குழு மொழியிலேயே எழுதப்போவதாக அறிவித்திருக்கிறார்.  இது ஒரு அரசியல் செயல்பாடு. 

 மேலை நாட்டின் அத்தனைக்குமான ஒரு எதிர்ப்புக்குரலாய் என் மொழியில் நான் எழுதுவதை நான் பதிவு செய்கிறேன்.   வனப்பேச்சி, கருப்பன் என்று நான் என் மண் சார்ந்து எழுதுவதெல்லாம் பொலிடிகல் ஸ்டெட்மென்ட்தான்.  படைப்பு என்பது முழுக்க தாய்மொழியில் வந்தால்தான் சரியாக இருக்கும்.  அதைச்செய்வதில்தான் எனக்கு விருப்பம்.


தங்களின் இலக்கிய வளர்சிக்கு தாங்கள் சார்ந்திருக்கும் திராவிட முன்னேற்றக்கழகம் துணைபுரிகிறது என்று சொல்லலாமா?

  அரசியலைப்பொருத்தவரைக்கும் நான் பிறந்தது முதல் திமுகதான்.  திமுக காரியாகத்தான் இருப்பேன்.  திமுககாரியாகத்தான் இறப்பேன்.  இலக்கியம் என்பது  மனம் சம்பந்தப்பட்டது.  அரசியல் கோட்பாடுகளை வைத்து இலக்கியம் படைக்க முடியாது.  அதனால்தான் நான் சொல்வேன்,  கவியரங்கங்களில் நான் சொல்லிய கவிதைகள் எல்லாம் நான் செய்தவை.   நான் எழுதினவை கிடையாது.  எந்த விதமான கோட்பாடு இல்லாமலும், எந்தவிதமான மனம் சார்ந்தும், எந்தவிதமான விசயத்தை முன்வைத்தும் இலக்கியம் இயங்கும். 

தமிழ் இலக்கியத்தடத்தில் தாங்கள் எவ்வாறு அறியப்படவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

 அறியப்படவேண்டும் என்பதை விட நினைக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.  அட,இப்படி ஒரு கவிதை நாம் எழுதலையே என ஐந்து கவிதைகள் எழுதியிருந்தால் போதும் என்று நினைக்கிறேன். இருபது ஆண்டு இலக்கிய பரப்பை எடுத்து பார்க்கின்றபோது,  அந்த அளவிற்கு நான்கைந்து கவிதைகள் இருந்தால் போதும்.   அதைவிட வேறொன்றும் தேவையில்லை. 

 திரைப்பட விழாக்களில் எல்லாம் பங்கேற்று வருகிறீர்கள்.   திரைப்பாடல் எழுதும் எண்ணம் இருக்கிறதா?

நட்பு அடிப்படையில் பாராதிராஜா, அமீர் அவர்களோட விழாக்களில் பங்கேற்றுள்ளேன்.  திரைப்படம் என்பது முக்கியான, வலிமையான ஊடகம்.   அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.  இப்போது இருக்கின்ற தமிழ்திரைப்படச் சூழலில்,  அறிவு சார்ந்த ஒரு பெண்ணை முன்னிறுத்துகிறதா? அந்த சூழல் இருக்கிறா என்று எனக்கு தெரியவில்லை. பாலசந்தர் அவர்களுடைய படங்கள் எல்லாம், அறிவு சார்ந்த ஒரு பெண்ணை முன் நிறுத்துவதாக இருக்கும்.   அதனால் அவர் மேல் எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. 

எழுதும்மா...எழுதும்மா’ என்று அறிவுமதி அண்ணன் பல தடவை சொல்லியிருக்கிறார்.  அந்த இடத்தில் உட்கார்ந்து இந்த மாதிரியான விசயத்தை செய்ய முடியுமா?  கவிதை என்பது ஒரு அகம் சார்ந்த செயல்பாடாக நினைக்கிறேன்.  தலைப்புகளின் கீழ் எழுதுவதே சிரமமானதாக இருக்கும்போது மெட்டுக்கு பாட்டு எழுதுவதோ,  சிச்சுவேசனுக்கு எழுதுவதோ எனக்கு அமையுமா என்பது தெரியவில்லை. அதனால் இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை.


* தமிழ்நாடன் -  கதிரவன்
படங்கள் : எஸ்.பி.சுந்தர்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [7]
Name : gopala.narayanamoorthy Date :7/2/2013 4:59:43 PM
தமிழச்சியின் நேர்காணல் அருமை. நக்கீரன் நந்தவனத்திற்கு நன்றி.
Name : Ravi-Swiss Date :10/13/2012 11:27:43 AM
இவரின் புலம்பெஜர் ஈழத்தமிழர்களின் படைப்புக்களின் ஆராச்சிகள் வெற்றி பெற நாம் வாழ்துகின்றோம்' அன்னாருக்கு வேண்டிய உதவிகளை செய்து தர' நானும் சுவிசில் தஜாராக இருக்கின்றேன்' இதனை கீழே குறிப்பிட்டு இருக்கும் மின் அஞ்சலில் அவருக்கு தெரியப்படுத்துகின்றேன்' நன்றி'
Name : இரா.தெ.முத்து Date :10/6/2012 11:27:43 PM
மிக நேர்மையான நேர்முகமாடல்.மண்ணையும் மக்களையும் மறவாத செமதிக்கு வாழ்த்துகள்
Name : kavi Date :10/4/2012 4:30:03 PM
தமிழச்சி தங்கபாண்டியனின் மின்னஞ்சல் முகவரி: vanapechi@yahoo.co.in
Name : kathir Date :10/4/2012 4:26:23 PM
vanapechi@yahoo.co.in
Name : suprajaa Date :10/4/2012 7:48:30 AM
மிகச் செறிவான பேட்ட!ி
Name : K. S. SIVAKUMARAN Date :10/4/2012 6:03:49 AM
இந்த நேர் கானலைப் PIRAURITHAMAIKAAKA உங்கள் ஏட்டிற்கு நன்றி.இலங்கையில் வசிக்கும் நான் இந்தப் கருத்தாடல் மூலமே இந்த அறிஞர் தொடர்பாக விபரங்களை அறிந்து கொண்டேன் நானும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும் ஒரு திறன் ஆய்வாளன். அவர்களுக்குஎனது நூல்களைப் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம். அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தயவு செய்து தெரிவியுங்கள்.அவர்களின் ஈமெயில் முகவரியை அறியத்ப் தருவீர்களா? நன்றி.