நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :28, ஜனவரி 2013(21:27 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2013(21:27 IST)தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி!
- எழுத்தாளர் பகவானந்ததாசன் 
Redo

ழுத்தாளர் பகவானந்ததாசன் மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், இரண்டு புதினங்களையும், இரண்டு திரைக்கதை வடிவ நூல்களையும், ஐந்து மேடை நாடகங்களையும், ஒரு கவிதை நூலையும் எழுதியுள்ளார்.

இதயம் பேசுகிறது, மகரந்தம், மக்கள் மேடை ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகவும், திரைப்பட இயக்குநர் வீ.சேகர் அவர்களிடம் "தமிழன்' எனும் புனைப்பெயரில் துணை இயக்குநர் பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார்.குறிப்பிடத்தக்க இலக்கியவாதியான இரா.பகவானந்ததாசன் அவர்களுடன் ஒரு நேர்காணல் .

இலக்கியவாதியாக உருவாக உங்கள் குடும்பச் சூழல் உதவியாக இருந்ததா?

என் பிறப்பு, வளர்ப்பைப் பற்றி சொன்னால் மட்டுமே இந்தக் கேள்விக்குப் புரியும்படியான ஒரு பதிலைச் சொல்ல முடியும்.

நான் 1948 ஆகஸ்ட் 13-ஆம் நாள் பிறந்தேன். எட்டுமாதக் கைக்குழந்தையாய் நான் இருந்தபோது 1949 ஏப்ரல் 18-ஆம் நாள் என் தந்தை இறந்துபோனார். ஆதரிப்பார் யாருமற்ற நிலையில் திருநள்ளாற்றில் உள்ள என் தாயாரின் தாய்வழிப் பாட்டி வீட்டில் என்னுடன் அடைக்கலமானார் அம்மா. மிகவும் சிறிய குடிசை. அம்மா, பாட்டி இருவருமே படிப்பறிவு அற்றவர்கள். ஐந்தாறு ஆடுகள் இருந்தன. 

திருநள்ளாறு பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்டிருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்தது. தமிழகத்தில் காமராசர் மதிய உணவுத் திட்டம் கொண்டு வருவதற்கு முன்பே புதுச்சேரி பிரெஞ்சு  ஆட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டது. அதனால் எனக்கு மதிய உணவுப் பிரச்சினை இல்லை. வீட்டில் இரவில் மட்டும் ஒருவேளை சோறு சமைப்பார்கள். வீட்டில் மண்ணெண்ணெய் சிம்னிதான் விளக்கு. படிப்பதற்கு விளக்கு கிடையாது. இந்தச் சூழ-ல் எப்படி, எதைப் படிக்க முடியும்?

 எங்கள் வீட்டு ஆடுகள்தான் என்னைப் படிக்க வைத்தன. அப்போதெல்லாம் காலாண்டுத் தேர்வு விடுமுறை ஒரு மாதம். அரையாண்டுத் தேர்வுக்கு ஒரு மாதம். முழு ஆண்டுத் தேர்வுக்கு இரண்டரை மாதம் விடுமுறை கிடைக்கும். என் வீட்டுக்கு எதிர் வீட்டில் இரண்டு ஆசிரியர்கள் குடியிருந்தார்கள். அவர்களிடம் கேட்டு, பள்ளி நூலகங்களி-ருந்து  நூல்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்வேன். காலை எட்டு மணிக்கெல்லாம் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன். ஒரு கையில் மதியத்திற்குப் பழைய சோறும், மறு கையில் படிக்க புத்தகமுமாகச் செல்வேன். ஆடுகளை மேய விட்டுவிட்டு, மரக்கிளைகளில் ஏறி உட்கார்ந்துகொண்டு படிப்பேன். 

முதலில் எந்த வகையான நூல்களைப் படிக்கத் தொடங்கினீர்கள்? எந்த வயதிலிருந்து படிக்க ஆரம்பித்தீர்கள்?

அந்தக் காலத்தில் திரைப்படம் பார்க்கப் போனால் பாட்டுப் புத்தகம் விற்பார்கள். பத்து காசு விலை. அதிலுள்ள கதைச் சுருக்கம் போல சொந்தமாகக் கதைச் சுருக்கம் எழுதுவேன். இப்படி என் எழுத்துப் பழக்கம் ஆரம்பமாயிற்று. எட்டணாவிற்குத் துப்பறியும் மர்மக்கதைப் புத்தகங்கள் கிடைக்கும். காசு சேர்த்து மாயாவி, மேதாவி, சிரஞ்சீவி, கலாதர், பிறகு தமிழ்வாணன் இவர்களது நூல்களை வாங்கிப் படித்தேன். பள்ளித் தோழர்கள் ஓரிருவருக்கு இந்தப் புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து, அவர்களையும் இதுபோன்ற புத்தகங்களை வாங்கச்செய்து இப்படியாக நிறைய புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சொந்தமாக "யார் குற்றவாளி?', "காட்டு பங்களா காட்டேரி' போன்று சிறு சிறு கதைகளை எழுதி நண்பர்களுக்குக் காட்டிப் பாராட்டுப் பெறுவேன். பத்து வயதுக்குள் இந்த நிலையை எட்டினேன். சக மாணவர்களுக்கு நான் பாட்டுக் கட்டுவதும் கதை கட்டுவதும் தெரிய வந்தது. என் எதிர் வீட்டி-ருந்த இரண்டு ஆசிரியர்களும் தங்களுக்குப் பொழுதுபோகாத நேரத்தில் நான் கட்டிய பாடல்களையும், கதைகளையும் கேட்டு ரசித்துப் பாராட்டி ஞஊக்கம் தந்தார்கள்.

உங்கள் பெயர் முதன் முதலில் எந்தப் பத்திரிகையில் அச்சில் வந்தது?

 பலருடைய பெயர் முதன்முதலில் அச்சில் வருவது அவர்களது கல்யாணப் பத்திரிகையில்தான். ஆனால் என் பெயரும் புகைப்படமும் முத-ல் அச்சில் வந்தது 1960-ல் என் பன்னிரெண்டாம் வயதில். "சுதேசமித்திரன்' என்றொரு நாளிதழ். முற்காலத்தில் மகாகவி பாரதியார், சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். என் மாணவப் பருவத்தில் சுதேசமித்திரன் மிகவும் புகழ் வாய்ந்த நாளிதழாகும். அந்த நாளிதழ் வெள்ளிக்கிழமை தோறும் ஒரு பக்கத்தை மாணவர் மலராக வெளியிட்டது. சமுதாயச் சிந்தனை மிக்க கேள்விகளைக் கொடுத்து விவாத அரங்கம் நடத்தியது. "இந்தி மொழியில் தமிழுக்கு ஆபத்தா? படிப்பில் பெண்கள் ஆண்களை மிஞ்சுகிறார்களா?' என்பன போன்ற கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் எழுதவேண்டும். தேர்ந்தெடுத்த சிறந்த பதில்களை புகைப்படத்துடன் வெளியிடுவார்கள்.

"காலர்' கிழிந்த சட்டை போட்டிருந்த என் புகைப்படமும், கட்டுரையும் நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது சுதேசமித்திரனில் வெளியாயிற்று. அதில் தொடர்ந்து சிறு கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதினேன். 1964 மே 27-ல் இந்தியாவின் முதல்  பிரதம மந்திரி பண்டித ஜவஹர்லால் நேரு இறந்தார். அன்றே ஓர் இரங்கற் கவிதை எழுதி அனுப்பினேன். உடனே அதை வெளியிட்டார்கள். தமிழில் அவருக்காக வெளிவந்த முதல் அஞ்ச-க் கவிதையாக அதுவே அமைந்தது. எனக்கு அப்போது பதினைந்து வயது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி முடிவுக்காகக் காத்திருந்தேன். சி. சுப்பிரமணியம் மத்திய அமைச்சராக இருந்தார். நேருவின் மரணத்தை அவர்தான் உலகுக்கு அறிவித்தார்.

அந்த இரங்கல் கவிதையைச் சொல்ல முடியுமா?

பகவானந்ததாசன் : இரண்டு கவிதைகள் எழுதினேன். ஒன்றுதான் நினைவில் இருக்கிறது. சொல்கிறேன்...
"மன்னுயிர் காத்த ஜவகர்லால்
மக்கள் வாழ்த்தும் ஜவஹர்லால்
தன்னுயிர் நீத்த ஜவகர்லால்
தாரணி போற்றும் ஜவகர்லால்
கென்னடி தோழர் ஜவகர்லால்
கெழுமிய தலைவர் ஜவகர்லால்
நின்னடி தொழுதோம் ஜவகர்லால்
நீடு வாழ்க நின்புகழே!

கவிதையில் எதுகை, மோனையெல்லாம் சரியாக அமைந்திருக்கின்றனவே. பதினைந்து வயதுக்குள் யாப்பிலக்கணத்தை எப்படி அறிந்துகொண்டீர்கள்?

பாலகனாயிருந்த திருஞானசம்பந்தர் பதிகம் பாடியதைப் படித்திருக்கிறோம். மகாகவி பாரதியார் 11 வயதில் வெண்பா பாடியுள்ளார். உ.வே.சாமிநாதர் 11 வயதில் ஔவையாரின் "ஆற்றுப் பெருக்கற்று' எனத் தொடங்கும் கடினமான வெண்பாவை சீர் பிரித்துச் சொல்- மாயூரம் மீனாட்சி சுந்தரனாரை அசத்தியுள்ளார். அவர்களெல்லாம் அந்த வயதுக்குள் யாப்பிலக்கணத்தைத் தெளிவாகக் கற்றுணர்ந்தவர்கள். யாப்பெருங்கலக் காரிகை என்பது கவிதை புனைவதற்குரிய இலக்கணச் சூத்திரங்களைக் கூறும் நூல். மிகவும் கடினமானதும் கூட.
"காரிகை கற்றுக் கவிபாடுவதினும்
பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று' என்பர்.

கவிதை இலக்ணம் கற்றுக் கவி பாடுவதைவிட, தம்பட்டம் கொட்டிப் பிழைப்பதே போதும் என்பது பொருள்.ஆனால் உண்மையில் புலவர்கள் செய்த பயமுறுத்தல்தான் இது. பிற்காலத்தில் நான் "இதயம் பேசுகிறது' இதழில் மறைந்த எழுத்தாளர் மா.முருகன் தந்த ஊக்கத்தால் "மரபுக் கவிதை எழுதுவது எப்படி' என இருபது வார தொடர் கட்டுரை எழுதி பலரை கவிஞராக மாற்றினேன்.

இத்தனைக்கும் இன்றுவரை தமிழில் உள்ள சுமார் 50 இலக்கண நூல்களுள் எவற்றையும் தொட்டவனோ, கற்றவனோ அல்ல. எனக்கு இலக்கணம் தந்தவை அந்தக் காலத்தில் நான் வாங்கிச் சேமித்து வைத்திருந்த திரைப்படப் பாடல் புத்தகங்கள்தான். பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி போன்றவர்கள் கவிதையின் அடிப்படை இலக்கண அமைப்பைத் தந்தார்கள். பிறகு   பாரதியார், பாரதிதாசன், சுரதா, பொன்னிவளவன், முடியரசன், வேழவேந்தன் போன்றவர்களின் கவிதை நூல்களையும், அதற்குப் பிறகு சங்க இலக்கியங்களையும் வாய்விட்டுப் படித்து யாப்பிலக்கணத்தை உணர்ந்துகொண்டேன். புதுவையி-ருந்து திரு.திருமுருகன் அவர்கள் வெளியிட்ட "தெளிதமிழ்' இதழில் "குறித்தபடி படைத்த பாடல்கள்' என்றொரு பகுதி வரும். தமிழின் அனைத்து வகைப் பாவினங்களிலும் கவி புனையும் ஆற்றலை அதன் மூலம் பெற்றேன்.கவிதை ஆற்றல் பெற்ற நீங்கள் கதை எழுத ஆரம்பித்தது ஏன்?

 அடிப்படையில் நான் கவிஞன்தான். சொல்லப் போனால் கதை எழுதுகிறவர்கள் அனைவருமே ஆரம்பத்தில் கவிதைதான் எழுதியிருப்பார்கள். விடலைப் பருவத்தில் அவர்களுக்குச் சக மாணவியிடத்து ஏற்படும் ஈர்ப்பு, அவர்களைப் பெண் வர்ணகைக் கவிதைகளை எழுத வைக்கும். ஆனால் அந்தக் கவிதைகள் எங்கும் போணியாகா. நான் 16 வயதிலிருந்து இப்போது வரை கவியரங்குகளில் பங்கேற்று ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு கவிதை நூலுக்குப் பிறகு இரண்டாவது கவிதை நூல் முயற்சிக்கு எந்தப் பதிப்பகமும் ஆதரவு தரவில்லை. "சிறுகதை, புதினம் என்றால் பதிப்பிக்கலாம்' என்று பதிப்பகத்தார் கூறுவதைக் கேட்டுச் சிறுகதைகள், புதினங்கள் எழுதத் தொடங்கினேன்.

 மாணவப் பருவத்தில் நான் நடத்திய "அருவி' என்னும் கையேட்டிதழில் பல வகைகளில் நான் எழுதிய பயிற்சியும், என் வகுப்பாசிரியர் திரு.அனந்தநாராயணன் அவர்கள், நான் நன்றாகப் படிக்கும் மாணவன் என்பதால் வகுப்பறையில் அவர் பாடம் நடத்தும் வேளையில் நான் நூலகத்தி-ருந்து எடுத்து வந்த நூல்களைப் படிக்கத் தந்த அனுமதியும் எனக்குக் கதை எழுதும் கலையை அறிமுகப்படுத்தியிருந்தன. பேராசிரியர் கல்கி, டாக்டர் மு.வரதராசனார், சாண்டில்யன் போன்றோர் எழுதிய பெரிய நூல்கள் அனைத்தும் எட்டாம் வகுப்பி-ருந்து பத்தாம் வகுப்பு வரை பாட வேளை நேரத்தில் என்னால் படிக்கப்பட்டவையாகும். வீட்டிலும், தூங்கும்... குளிக்கும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் படிப்பது இன்றுவரை தொடரும் செயலாகும். படிப்பதை என்று நிறுத்துகிறேனோ அன்றே அவன் எழுதுவதும் நின்றுபோகும். நான் சாப்பிடும் நேரத்திலும் புத்தகம் படிப்பேன். கக்கூசுக்கும் புத்தகம் எடுத்துச் செல்வேன். தமிழ் நூல்கள் மட்டுமின்றி, மலையாளம், வங்காளம், ரஷ்ய நூல்கள் என்று நிறைய படித்திருக்கிறேன். படிப்பதை விட ஆனந்தம் தரக்கூடிய செயல் உலகில் வேறதுவும் இல்லை. படித்துப் பார்த்தால்தான் இது புரியும்.

உரைநடையில் உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு எது? எவை?

 ஆனந்தவிகடன், மாதத் தொடர்கதைகள் என நான்கு வாரங்களுக்கு ஒரு தொடர்கதை வீதம் 12 தொடர்கதைகளை 1969-ல் வெளியிட்டது. அவற்றைத் திறனாய்வு செய்யும்படி ஒரு போட்டி அறிவித்தது. 1970-ல் வெளியான மாதத் தொடர்கதைகள் திறனாய்வுப் போட்டியில் நான் முதற்பரிசு பெற்றேன். அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியைக் கல்கி ஆண்டுதோறும் நடத்துகிறது. 1976-ல் நடந்த போட்டியில் "விமோசனங்கள்' என்ற என் கதை அறிமுக எழுத்தாளர் என்ற முத்திரையோடு பரிசு பெற்றது. மறுமணம் செய்துகொண்ட கைம்பெண்ணின் மனநிலையைச் சித்தரிக்கும் கதை அது. அப்போதைய மாயூரத்தில் (மயிலாடுதுறை) வசித்த அறை நண்பர் 10 பேர்களுக்குள், "இந்தக் கதை கைம்பெண் மறுமணத்தை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா?' என்கிற விவாதம் விடிய விடிய நடந்து, அவர்களால் முடிவு கண்டுபிடிக்க முடியாமல், கல்கியில் இருந்த என் முகவரியைப் பார்த்து என்னிடமே முடிவு கேட்க என் குடிசைக்கு வந்துவிட்டார்கள். "ஏற்கனவே மனைவியை இழந்த மிகவும் நல்லவர்கள், கைம்பெண்ணை மறுமணம் செய்துகொள்ளலாம்' என்று சொல்- அனுப்பினேன். 

குமுத்தில் நான் எழுதிய "மதிப்பெண்கள்' என்கிற சிறுகதை ஒரு முக்கிய விளைவை ஏற்படுத்தியது.
தொண்ணூறுகளில் பள்ளி மாணவிகள் பாவாடை தாவணி தவிர வேறு சுடிதார் போன்ற உடைகள் அணிந்து வரக்கூடாது என்று தடை இருந்தது. சுடிதார் உடுத்திவரும் மாணவிகள் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

பாவாடை தாவணியை விட, சுடிதார்தான் பருவப்பெண்களுக்குப் பாதுகாப்பான உடை என்கிற கருத்தில் நான் எழுதிய கதையை முக்கியத்துவப்படுத்தி முதல் நான்கு பக்கங்களில் 1990-ல் வெளியிட்டார்கள்.

அந்தக் கதை வெளிவந்தவுடன் சுடிதாருக்கான தடை அனைத்துப் பள்ளிகளிலும் நீக்கப்பட்டது. இன்று சுடிதார் கன்னிப்பெண்களின் தேசிய உடையாகிவிட்டது.

இப்படி நல்ல சிறுகதைகளை எழுதிய நீங்கள் அதிகம் எழுதாமலும், உரிய புகழ் பெறாமலும் இருப்பதற்குக் காரணம் உண்டா?

காரணம் நானேதான். எழுத்தாளர் என்னும் புகழ் கிரீடத்தைச் சுமந்து, என் தனி மனித சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை. அநேகமாக தமிழின் முன்னணி இதழ்களில் கதைகள் எழுதியிருந்தாலும், ஆனந்தராஜா, ஞானபண்டிதன், தமிழன், திரிபுரசுந்தரி போன்ற புனைப்பெயர்களைப் பயன்படுத்தினேன்.

1966-ல் புதுவை அரசு கல்வித்துறையில் ஆசிரியராகப் பணி ஏற்றதி-ருந்து 1998-ல் நான் விருப்ப ஓய்வு பெறும்வரை ஆசிரியர் சங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு, அரசு ஊழியர் அமைப்புகள் இவற்றின் தலைமைப் பொறுப்புகளில் தொடர்ந்து போராட்டக் களங்களில் இருந்தேன். மக்கள் பிரச்சினைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தமையால் அவர்களுக்கு கோரிக்கை மனுக்கள் எழுதித் தரவே  எனக்கு நேரம் போதவில்லை. இக்காரணங்களால் அதிகம் எழுத முடியவில்லை. இதழ்களில் எழுதுவதனால் ஏற்படும் விளைவுகளைவிட கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டு அதனால் மக்களுக்குக் கிடைக்கும் நற்பணிகளில் மகிழ்ச்சி கண்டேன்.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு மனுக்களைச் சொல்ல முடியுமா?

1. புதுச்சேரி மாநிலத்தில் முன்பெல்லாம் சைக்கிளில் விளக்கு இல்லாமல் இரவில் செல்பவர்களைக் காவல்துறையினர் பிடித்து வழக்குத் தொடுத்து நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று அபராதத் தண்டனை கொடுத்து வந்தார்கள். இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் தினக்கூலிக்குச் செல்லும் தொழிலாளர்கள். மற்றையோர் காவலர்களுக்குக் கையூட்டுக் கொடுத்து சென்றுவிடுவார்கள்.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் எல்லா கிராமங்களும் மின் இணைப்பு பெற்றுவிட்ட செய்தி வந்தது. உடனே முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினேன். "இனியும் சைக்கிளில் விளக்கு இல்லாமல் செல்பவர்களைக் காவலர்கள் பிடித்து அபராதம் விதிக்க வேண்டுமா?' என்று என் கோரிக்கைக் கடிதம் கிடைத்த அன்றே ஏற்று, சட்டசபையில் அந்த சட்டத்தை ரத்து செய்தார்.

2. மொரார்ஜி தேசாய் 1977-ல் பிரதம மந்தரியானவுடன் தேர்தல் சீர்திருத்தம் பற்றி ஆராய ஜெயப்பிரகாஷ் நாராணன் தலைமையில் ஒரு குழு அமைத்துப் பொதுமக்களிடம் கருத்துக் கோரப்பட்டது. நான் 25 சீர்திருத்தங்களை எழுதி அனுப்பினேன். குழு அறிவித்த 60 பரிந்துரைகளில் என் 25-ம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

3. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் +2 தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் மேற்படிப்புப் செலவை அரசே ஏற்கும் என்று அப்போது (1996-2001) தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் அறிவித்தார். அன்றே முதலமைச்சர் கலைஞருக்கு கடிதம் எழுதினேன். "பெரும்பாலும் அம்மாணவர்கள் அதற்குள்ள வசதியான குடும்பத்துப் பிள்ளையாகவே இருப்பார்கள். ஏழை மாணவர்களுக்கு இந்த அறிவிப்பால் பயனில்லை என்று. உடனே முதலமைச்சர் கலைஞர் "அக்குடும்பங்களில் ஏற்கனவே யாரும் பட்டதாரிகள் இருக்கக்கூடாது. மாவட்டத்தில் மூன்று இவ்வகைக் குடும்ப மாணவர்களுக்கே கல்வி உதவி என்று மாற்றி அறிவித்ததால் பல மாணவர் பயனடைந்தனர். 

உங்கள் படைப்புகளில் உண்மைச் சம்பவங்கள், கற்பனை இவற்றுள் எவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்?

பெரும்பாலான சிறுகதைகளில் உண்மைச் சம்பவங்கள் ஓரளவு இழையோடும். புதினங்கள் முற்றிலும் கற்பனையாக இருக்கும். உண்மைச் சம்பவங்களின் அனுபவக் கருத்துக்களை ஆங்காங்கே தெளித்திருப்பேன்.

திரைப்படத் துறையில் உங்களுக்கு ஈடுபாடு  ஏற்பட்டது ஏன்?

 நான் முன்னமே சொன்னதுபோல எங்கள் ஊர் திரையரங்கத்தில் படம் பார்க்க என்னிடம் காசு வாங்கமாட்டார்கள். மூன்று நாள் நான்கு நாளுக்கொரு படம் மாறும். அதனால் நிறைய படம் பார்ப்பேன். பாட்டுப்புத்தகம் வாங்குவேன். அதிலுள்ள கதைச் சுருக்கங்களைப் படிப்பேன். அவற்றைப் போல பல கதைச் சுருக்கங்களை எழுதுவேன். நான் நடத்திய கையேட்டுப் பிரதியில் அவைகளை சிறுகதைகளாக மாற்றுவேன். பள்ளி ஆண்டுவிழா நாடகங்களில் நடிப்பேன்.

 திரை இசைகளுக்கேற்ற பாட்டு கட்டுவேன். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் ஆசிரியரான பிறகும் நாடகம் எழுதி நடப்பேன். இப்படிக் கலையார்வம் என் நெஞ்சுக்குள் கனன்றுகொண்டிருந்தது. எப்படியாவது திரையுலகில் நுழைந்துவிட வேண்டுமென்று ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் சென்னை சென்று நடிகர் திலகம், நவரசத்திலகம் , முத்துராமன், சிவகுமார், எம்.எஸ்.வி., .பாரதிராஜா மற்றும் பலரைச் சந்தித்து வாய்ப்பு கேட்பேன். அனைவரும் பிறகு வரச்சொல்வார்கள். அவர்கள் சொல்லும்போது செல்ல பணமிருக்காது. ஆனால் திரைப்பட ஆசை கருகவில்லை. ஆகவே வேலையை விட்டுவிட்டு சென்னையில் குடியேறினேன். முதலில் மகரந்தம், பிறகு இதயம்  பேசுகிறது இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றினேன்.

திரைப்பட இயக்குநர் வீ.சேகர் அவர்களை ஒருநாள் சந்தித்தேன். நீண்ட நேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்த அவர், என்னை உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார். அவர் "மக்கள் மேடை' என்னும் மாத இதழையும் நடத்தத்தொடங்கினார். அதன் உதவி ஆசிரியராகவும், அவரது திரைப்படங்களான "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', "வீட்டோட மாப்பிள்ளை', "நம்ம வீட்டுக் கல்யாணம்', "ஆளுக்கொரு ஆசை' ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும், "தமிழன்' என்னும் புனைப்பெயரில் பணியாற்றினேன். இயக்குநர் திரு.வீ.சேகர் அவர்கள் என் மூத்த வயதை மதித்து மிகவும் அன்போடு திரைப்படத்தின் அனைத்துத் துறை அனுபவங்களையும் நான் அறிந்துகொள்ள உதவினார்.

ஓய்வு நாட்களில் ஒளி ஓவிய இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் "கதை நேரம்' தொலைகாட்சித் தொடர்களில் அவருக்கு உதவியாக பணியாற்றி சில தொடர்களில் நடித்தேன்.

கதை, நாடகம் எழுதுவதற்கும், திரைக்கள்தை உரையாடல் எழுதுவதற்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்துகொண்டு, "காதலினால் அல்ல....' என்று முன்பு நான் எழுதிய தேவதாசிப் பெண்ணின் கதையைத் திரைக்கதை உரையாடல் வடிவமாக்கி அதை "காவ்யா' பதிப்பகத்தின் மூலம் நூலாக வெளியிட்டுள்ளேன்.

காதலினால் அல்ல திரைக்கதைக்கு கிடைத்த பாராட்டுகள் எப்படி?

"காதலினால் அல்ல' திரைக்கதை வடிவத்தை வாசிக்கும்போது ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை மனக்கண்ணால் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. எழுத்தாளரின் வெற்றிக்கு இந்த உணர்வே ஒரு சான்று என்று நூ-ன் அணிந்துரையில் மனம் திறந்து பாராட்டியுள்ளார் "அமுதசுரபி'ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள். மேலும், "காதலினால் அல்ல' நூல் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

உங்களுக்கு கிடைத்த மறக்க முடியாத பாராட்டுகள் எவை?

 என் "உயிர்ப் பறவை' நூலுக்காக தமிழக அரசின் முதல் பரிசை அப்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடம் பெற்றதை என்னால் மறக்க முடியாது. என் ஒவ்வொரு நூலையும் அவருக்கு அளிப்பதை என் வாழ்நாள் கடமையாகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.

கவியரசு கண்ணதாசன் அவர்களை 1975-ல் புதுச்சேரியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கவிஞன் என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். "உங்கள் கவிதைகள் சிலவற்றோடு நாளை என்னை சந்தியுங்கள்' என்று கூறினார். அப்போது அவர் மதுப்பழக்கத்தோடு கூட, "பெத்தடின்' என்னும் போதை ஊசிக்கும் அடிமையாகியிருப்பதாக குமுதம் இதழில் அவரே குறிப்பிட்டிருந்தார்.

அந்த போதை ஊசி பழக்கத்தை கைவிட வேண்டி ஆறு கவிதைகள் எழுதிச் சென்று அவரிடம் கொடுத்தேன்.

சத்தியம்,  தர்மம்,  நீதி
தழைத்திடக் கவிதை பாடும்
தத்துவ ஞானி.  நீங்கள்
சமத்துவக் கொள்கைத் தோணி.

குத்திடின் போதை ஊறும்
பெத்தடின் விரும்ப லாமா?
சத்தியம் செய்க இன்றே
சாகாமல் நெடுநாள் வாழ!

-
என்பது அதில் ஒரு கவிதை. படித்துப் பார்த்துவிட்டுப் பாராட்ட, 
"நீங்களும் வாழவேண்டும் என்னையும் வாழ்த்த வேண்டும்' என்றேன்.

உடனே, என்னை வாழ்த்தி ஒரு கவிதை சொன்னார் :
தகவுடை மேலோர் பண்பும்
தனிப்பெரும் கலைஞர் நெஞ்சும்
அகமெலாம் அழியா அன்பும்
ஆரோக்ய மான வாழ்வும்
மிகவுடை மேலோ னாக
மிக்குயர் புகழோ னாக
பகவான்தாஸ் வாழு மாறு
பரந்தாமன் அருள்வா னாக!
கவிஞர் கண்ணதாசனின் இந்தப் பாடலைத் தேவ வாக்காகக் கருதுகிறேன்.

’’பகவானந்ததாசன் கதைகளில் மூன்று சிறம்பம்சங்கள் உள்ளன. கதை மாந்தர் பேசிக்கொள்வதிலிருந்தே அவர்களின்  குண இயல்புகள் புரிகின்றன. நுணுக்கமான அளவோடு கூடிய வர்ணனை கதையை நடத்திக் செல்கிறது. மெல்லிய முடிச்சு கடைசியில் எதிர்பாராத விதமாக அவிழ்க்கப்படுகிறது.’’

- மேற்கண்டவை கலைமாமணி விக்கிரமனின் பாராட்டுரை.


உங்ள் நன்றிக்குரியவர்கள் யார், யார்?

குழந்தைக் கவிஞர் அமரர் அழ.வள்ளியப்பா அவர்கள் முதன்மையானவர். காரைக்காலுக்ஙகு வந்தபோது அவரைச் சந்தித்தேன். என்னைப் பற்றிய விபரம் அறிந்தவுடன் சென்னைக்கு அழைத்தார். என்னை திரு. வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கு அறிமுகப்படுத்தி என் நூல்களை வெளியிடச் செய்தார். அவர் வாழும் காலம் வரைக்கும் சென்னைக்குச் சென்றால் அவர் வீட்டில்தான் தங்கவேண்டும், உணவு உண்ண வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார். அவரது மறைவுச் செய்தியை அறிந்ததும் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராயபுரம் என்னும் ஊருக்குச் சென்ஞறு இறுதி அஞ்ச- செலுத்தினேன்.

அடுத்து பதிப்புச் செம்மல் வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு அவர்கள். என் இரண்டு புதினங்களைப் பதிப்பித்தார். என்மேல் அன்பு சொண்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என் நன்றி என்றும் உரியது.

கலைமாமணி விக்கிரமன் அவர்கள் என்னைத் தேடிக் கண்டுபிடித்து ஊக்கமும், ஆக்கமும் அளிப்பவர். என் கதைகளுக்குப் பரிசுகள் அளித்துக் கௌரவித்தார். அவரை அடிக்கடி சந்திப்பதன் மூலம் என் நன்றியை வெளிப்படுத்திவருகிறேன். 

திரைப்பட இயக்குநர் திரு.வீ.சேகர் அவர்கள், என்னை ஐந்தாண்டு காலம் அருகில் வைத்திருந்து மூன்று வேளை உணவிட்டு, திரைப்படத்தின் எல்லா வேலைகளையும் கற்றுக்கொள்ள அனுமதித்து, கடிந்து ஒரு சொல்கூடச் சொல்லாமல் மதிப்புடன் நடத்திய அவரது பேருள்ளத்துக்கு என் நன்றியை என்றும் தெரிவிப்பேன். என் முயற்சி, முன்னேற்றத்திற்கு எண்ணற்றோர் உதவியுள்ளனர். அவர்களுக்கெல்லாம் நன்றி!

உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

இனி ஆண்டுக்கு ஒரு நூல் வெளியிட எண்ணியுள்ளேன். திரைப்படத்துக்கான சில முற்றுப் பெற்ற கதைகள் என்னிடம் உள்ளன. அவற்றைத் திரைப்படமாக்கவேண்டும். கதை, திரைக்கதை, உரையாடல், பாடல்கள், இசையமைப்பு, இயக்கம் என்று என் பெயர் வண்ணத் திரையில் இடம் பெறவேண்டும் என்பதே என் நீண்ட கால அவா. அது நிறைவேறும் வரை அதற்கான பயிற்சிகளிலும் முயற்சிகளிலும் என் ஆயுள் உள்ளவரை ஈடுபடுவேன். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [19]
Name : Pa.Si. Ramachandran, Sr. Journalist Date :6/14/2013 5:52:09 PM
இப்படிப்பட்ட இலக்கிய வாதிகளை எல்லாம் எப்படி தேடி கண்டுபிடிக்கிறீர்கள்? ஓர் அருமையான மனிதர் திறமை பல இருந்தும், தனக்குள்ளேயே முடங்கிவிட்டது வருத்தமான செய்தி. 65 வயது ஆனாலும் இவர் நூற்றாண்டு வாழ்ந்து மெதுவாகவே நீடித்து வளரட்டும் - வாழட்டும்.
Name : பிரகாஷ் Date :11/27/2012 2:54:52 PM
மிக மிக அற்புதமான பேட்டி. எழுத்தாளர் இயக்குனராக இறைவன் அருள் புரியட்டும். நல்ல பேட்டியை வெளியிட்டமைக்கு நன்றி.ஃப்
Name : Zeal Date :11/26/2012 10:29:16 PM
That's a smart way of tihknnig about it.
Name : RIBU Date :11/14/2012 3:20:43 PM
நன்றி மறவாத நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான பகவானந்ததாசனை பேட்டி கண்டு வெளியிட்ட நக்கீரனுக்கு மிக்க நன்றி!
Name : E.பரமானந்தம்,காஞ்சிபுரம். Date :11/14/2012 10:29:00 AM
எனக்கு மிகவும் பிடித்த நேர்காணல்களில் ஒன்று இது...!
Name : மாலதி மோகன் Date :11/9/2012 11:05:14 AM
இப்படி நல்ல சிறுகதைகளை எழுதிய நீங்கள் அதிகம் எழுதாமலும், உரிய புகழ் பெறாமலும் இருப்பதற்குக் காரணம் உண்டா? என்ற கேள்விக்கு பகவானந்ததாசன் அளித்துள்ள பதில் சிந்திக்க வைக்கிறது...! ”காரணம் நானேதான். எழுத்தாளர் என்னும் புகழ் கிரீடத்தைச் சுமந்து, என் தனி மனித சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை” என்கிற வரிகள் அவரின் தனித்தன்மையைப் பறைசாற்றுகின்றன...! கிரேட் சல்யூட் சார்...!
Name : ramesh Date :11/7/2012 10:53:49 PM
ஏழ்மையில் இருந்து வரும் மனிதர்களிடமே ஆழமான கருத்துக்கள் உண்டு என்பது மீண்டும் ஐயாவின் நாவாடலின் மூலம் நிரூபிக்கப்படுகின்றது இப்படியான வல்லவர்களை திரையுலகம் முன்னிலைப்படுத்தவேண்டும் வாரிசுகளை மட்டும் நம்பி இருக்கக்கூடாது.
Name : ranjitharasikar Date :11/7/2012 10:32:47 AM
சத்தியம், தர்மம், நீதி தழைத்திடக் கவிதை பாடும் தத்துவ ஞானி. நீங்கள் சமத்துவக் கொள்கைத் தோணி. குத்திடின் போதை ஊறும் பெத்தடின் விரும்ப லாமா? சத்தியம் செய்க இன்றே சாகாமல் நெடுநாள் வாழ! - கண்ணதாசனைப் பாடிய கவிஞர் நீடு வாழ வாழ்த்துக்கள்!
Name : சிவராமசேது Date :11/1/2012 3:45:40 PM
நிறைய தகவல்கள் உள்ளன... இந்த நேர்காணல் ஒரு புத்தகம் படித்த அனுபவத்தை தருகிறது!
Name : s.ramakrishnan Date :10/30/2012 1:14:29 PM
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் அன்பைப் பெற்ற பகவானந்ததாசன், குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவாரா?
Name : சபாதம்பி Date :10/30/2012 1:06:47 PM
பகவான்தாஸிடம் இத்தனை திறமைகளா? வியப்படைந்தேன்..
Name : V.Swaminathan Date :10/28/2012 4:21:10 PM
எளிமையான , சுய விளம்பரமில்லாத திறநாளிகளை காண்பது மிக அரிது. அத்தகையோரை தேடி எங்களுக்கு இனம் காட்டியதற்கு நக்கீரனுக்கு மிக்க நன்றி .
Name : poongundran Date :10/27/2012 11:29:40 AM
குட் இன்டர்வியு... பகவானந்தரின் புத்தகங்கள் நக்கீரன் பதிப்பகத்தில் கிடைக்குமா?
Name : இளவரசு பரமசிவம் Date :10/25/2012 3:09:51 PM
சினிமாவில் வெற்றிபெற வயது ஒரு தடையே இல்லை; சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது போல, உடலின் வேகமும் மனதின் வேகமும் சமமாக உள்ளவரையில் - அல்லது - ஈடு கொடுக்கும் வரையில் சாதிக்கலாம்... எனவே, கவிஞர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்கள் கொண்ட பகவானந்ததாசன் அடுத்து சினிமா இயக்குனராகி வெற்றிப் படங்களைக் கொடுக்க வேண்டும்!
Name : தம்பி ராமையா Date :10/21/2012 12:10:06 PM
பகவானந்ததாசனின் கவிதைகள் ரசிக்கும்படி உள்ளன.வாழ்த்துக்கள்.
Name : E.Vijaya Date :10/20/2012 4:18:59 PM
பகவானந்ததாசன் விரைவில் திரைப்பட இயக்குனராகி வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்!
Name : ajct. jesudassimiyon Date :10/19/2012 6:24:34 PM
பகவானந்ததாஸ் அவர்களை வாழ்த்தி கவியரசு கண்ணதாசனே கவிதை பாடியிருக்கிறார்.. இதைவிட பெருஞ்சிறப்பு வேறென்ன வேண்டும்? நிறைய தகவல்களை அள்ளித்தரும் சிறப்பான பேட்டி இது... நன்றி...!
Name : எஸ். பானு வெங்கடேஷ் Date :10/15/2012 11:34:09 AM
ஒரு எழுத்தாளருக்குள் இருக்கும் பல்வேறு முகங்களை அறியும்படி செய்த நல்லதொரு நேர்காணல் இது...!
Name : shaha.bi Date :10/11/2012 3:49:22 AM
கவிசரின் தெளிவான பெட்டிஇது. திரு. பகவானந்ததாசு அவர்களை எனது சிறுவயது முதலே நன்கு அறிவேன் எங்கள்ஊரில் ஒரு தலைசிறந்த .இளம் கவின்சராக ௭ ழுபதுகளில் திகழ்ந்தார்.