நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :14, டிசம்பர் 2010(15:37 IST)
மாற்றம் செய்த நாள் :14, டிசம்பர் 2010(15:37 IST)மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்    
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோரை மக்களும், ரசிகர்களும் இதய தெய்வங்களாகவே கொண்டாடிக் கொண்டிருந்த அதே காலத்தில்... அவர்களின் சாயலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பில், தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்தி...  தனக்கெனவும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தவர் ஜெமினி கணேசன். 

1947 ல் மிஸ்.மாலினி படத்தில் சிறு வேடம் ஒன்றின் மூலமாகத் துவங்கியது ஜெமினியின் திரை வாழ்க்கைப் பயணம். 1952 ல் தாயுள்ளம் படத்தில் ‘அழகான’ வில்லனாக,  1953 ல் ஏ.வி.எம்.இன் ‘பெண்’ படத்தில் கதாநாயகனாக பரிணாம வளர்ச்சிப் பெற்று...   தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி மற்றும் ஒரே ஒரு இலங்கைப் படம் என பல மொழிகளிலும் பலவிதமான நடிப்பை வெளிப்படுத்தி 200 க்கும் மேற்பட்ட படங்களில்,  மூன்று தலைமுறைகள் கடந்து கடைசி வரை காதல் மன்னனாகவே வாழ்ந்தவர் ‘பத்மஸ்ரீ’ நடிப்புச் செம்மல் ஜெமினி கணேசன். 
 
நவம்பர் 17ஆம் தேதி அன்று ‘காதல் மன்னன்’ என அனைவராலும் கொண்டாடப்பட்ட ஜெமினியின் 90 வது பிறந்த நாள்.  
இதனையொட்டி நவம்பர் 21ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் மிகச்சிறந்த விழாவாக கொண்டாடினர் அவரது குமாரத்தியர்கள். 

ஜெமினியின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம், மற்றும் ஜெமினியின் ‘வாழ்க்கைப் படகு’ என்னும் புத்தகம் ஆகியவற்றை தமிழக முதல்வர் கலைஞர் வெளியிட, முறையே கே.பாலசந்தர், வாலி, வைரமுத்து ஆகியோர் பெற்று கொள்ளும் விதத்தில்... ரேவதி சுவாமி நாதன், மருத்துவர் கமலா செல்வராஜ், நாராயணி கணேஷ்,  மருத்துவர் ஜெயா ஸ்ரீதர் மற்றும் விஜயா சாமுண்டீஸ்வரி ஆகிய ஜெமினியின் ஐந்து புதல்வியரும் தங்களின் தந்தைக்கு வியத்தகு விழாவாக எடுத்திருந்தனர். 

தமிழக முதல்வர் கலைஞர் , பாலசந்தர் , வாலி, வைரமுத்து ஆகியோர் ஜெமினியை வாழ்த்திப் பேசினர்.  அனைவரின் வாழ்த்துகளையும் சேர்த்து அவர்கள் பேசிய வாழ்த்து மொழி நம் நந்தவனத்தில் எழுத்து மொழியாக...

கவிஞர் வாலி :

ஜெமினியும் நானும் திருச்சிக்காரர்கள். ஜெமினியை கஞ்சன் என்று கூறுவார்கள். ‘கஞ்சன்’ என்றால் ‘பிரம்மா’ என்றொரு பொருளும் உண்டு. பிரம்மா போல், ஜெமினியும் பல கதாபாத்திரங்களை படைத்தவர்.ஜெமினி கருமி அல்ல. உண்மையில் அவர் ஒரு தருமி. நான் கூறுவது திருவிளையாடல் தருமி அல்ல. அவர், யாருக்கும் தெரியாமல் எவ்வளவோ செய்திருக்கும் தருமி.  

இன்று உலக நாயகன் என்று கொண்டாடும் கமலை, பாலசந்தரிடம் ‘இவன் நல்ல திறமையானவன்’ என அறிமுகப்படுத்தி வைத்தவர் ஜெமினி. இவர் அறிமுகப்படுத்தி வைத்ததால்தான் நமக்கெல்லாம் ஒரு உலகநாயகன் கிடைத்தார். பாசமலர் படத்தில் ஆரூர்தாஸ் வசனம் எழுத இவர்தான் காரணம். இதுபோல் எத்தனையோ பேர் திரைத்துறைக்கு அறிமுகமாக இவர் காரணமாக இருந்துள்ளார்.   

 நான், எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு ஒரு சில பாடல்கள் எழுதியிருந்தபோதும் சரிவர வாய்ப்புகள் இல்லாது இருந்த காலம்... எனது நண்பர் ஒருவர், மதுரைக்கு வந்துவிடு உனக்கு 3000 ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித்தருகிறேன் என அழைத்தார். நானும் சரி மதுரைக்கே போய்விடலாம் என்று முடிவெடுத்திருந்தேன். அப்போது பி.பி. ஸ்ரீனிவாஸ்,  நான் தங்கியிருந்த அறைக்கு வந்திருந்தார்.  

அவரிடம், சமீபத்தில் என்னப் பாடல் பாடியிருக்கிறாய் என கேட்டேன்.  அதற்கு ஸ்ரீனிவாஸ், ஜெமினி நடித்த ‘சுமைதாங்கி’ படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் ‘மயக்கமா கலக்கமா’ என்றப்பாடலை பாடியிருப்பதாக கூறி, பாடியும் காட்டினார்.அந்தப் பாடலின் ஒவ்வெரு வரியும் எனக்கு புது உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் தந்தது. அது என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.  

மற்றொரு சமயம் கண்ணதாசனிடம் இது பற்றி பேசும் போது,   “என்னை,  உமது பாடலே உனக்கு ‘சத்ரு’வாக்கியது” என்று கூறியிருக்கிறேன்.

ஜெமினி கணேசன் ஒரு நாடகம் எடுப்பதாக இருந்தது. அதில் ஏ.எம்.ராஜாதான் கதாநாயகன். ஆனால் கதாநாயகி கிடைக்கவில்லை.  என்கிட்ட அதுபற்றி கேட்டதற்கு, “பாரதியாரின் ‘குயில்’ நாடகத்தில் நடித்த பொண்ண அறிமுகப்படுத்தி, இந்தப் பொண்ணு நல்லா நடிக்கும். உனது நாடகத்தில் நடிக்க வை,” என்றேன். அதேமாதிரி அந்தப் பொண்ணே நடிக்க முடிவாகி ஒத்திகை நடந்துகிட்டிருந்தது. ஒரு நாலு நாள் கழித்து, “என்ன நாடகம் எடுத்தாச்சா, அந்தப் பொண்ணு எப்படி நடிக்கிறது.” என்று கேட்டேன். அதற்கு ஜெமினி, “நாடகம் எடுக்கவில்லை.  அந்தப் பொண்ணும் இனிமே நடிக்காது. நானே அந்தப் பொண்ண கல்யாணம் கட்டிக்கப்போறேன்” என்றார். இப்படி நாலுநாள் ஒத்திகையின் போதே நடிக்க வந்தப் பொண்ண மனைவியாக்கி கொண்ட காதல் மன்னன்தான் ஜெமினி கணேசன். இயக்குனர் கே. பாலசந்தர் :

என்னுடன் நீண்டதொரு உறவு கொண்டிருந்தவர் ஜெமினி கணேசன். இவர் இயக்குனர்கள் விரும்பும் நடிகர்.தனது நடிப்பு பொறுப்பை இயக்குனர்களிடம் விட்டுவிடுவார்.இயக்குனர்கள் என்ன சொல்றாங்களோ அதை அப்படியே நடிப்பில் வெளிப்படுத்தக் கூடியவர்.  இவருடன் பணியாற்றும் இயக்குனர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும். அதேதானே இயக்குனர்களுக்கு தேவை. அதனாலேயே  எல்லா இயக்குனர்களுக்கும் பிடித்தமான நடிகரா ஜெமினி இருந்தார்.  

எனது இயக்கத்தில் ஜெமினி நடித்த ‘வெள்ளி விழா’ படத்தில் முதுமை குறித்த ஒரு பாடலை வாலி எழுதியிருப்பார். அதில், ‘வந்தால் வரட்டும் முதுமை உனக்கென்ன குறைச்சல்,’ என்ற அற்புதமான வரிவரும். அதே போல ஜெமினிக்கு எத்தக் குறைச்சலும் இல்லை.

குணச்சித்திர நடிப்பையும் தாண்டி எல்லாவிதமான நடிப்பையும் வெளிப்படுத்தியவர் ஜெமினி. எனது 'நான் அவன் இல்லை’ படத்தில் எட்டுவிதமான பத்திரங்களில் நடித்திருப்பார். அவரின் அந்த அசத்தலான நடிப்பை யாராலும் மறக்கவே முடியாது.  

கவிஞர் வைரமுத்து :

ஒரு சாதனையாளனின் புகழைப் பரப்ப இரண்டு விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறுவனம். மற்றொன்று மகன்கள்.ஜெமினிக்கு இந்த இரண்டுமே இல்லை.ஆனால், இந்த இரண்டையுமே முறியடித்து இருக்கிறார்கள் ஜெமினியின் மகள்களான கமலா செல்வராஜ் சகோதரியர். 

தந்தைக்கு மகன் ஆற்றும் பணியை மகள்கள் ஆற்றியிருக்கிறார்கள். தனது தந்தையின் 90 வது பிறந்த நாளை சிறப்பாக எல்லோரும் வியக்கும் வகையில் நடத்தியிருக்கிறார் கமலா செல்வராஜ். ஜெமினியின் வாழ்க்கையை ஆவணப்படமாக்கி அதையும் தமிழக முதல்வர் கலைஞர் கையால் வெளியிட்டும் இருக்கிறார். இதை மகன்களாலும்கூட இத்தனைச் சிறப்பாய் செய்திருக்கமுடியாது. அதை இந்த மகள்கள் செய்திருக்கிறார்கள்.  ‘பெண் பிள்ளை பெற்றால் எல்லாம் போகும், ஆண் பிள்ளை தான் ஆளும்’ என்று கூறுவதை பொய்யாக்கியிருக்கிறார்கள். 

எந்த ஒரு நடிகனிடமும்,  “நீங்கள் நடிக்க வராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்டால்”, மருத்துவராக ஆகியிருப்பேன், பொறியாளராக ஆகியிருப்பேன் இப்படி ஏதோ ஒன்றை கூறுவார்கள். ஆனால், நடிக்கவரும் முன்பே ஜெமினி கணேசன் ஒரு பட்டதாரி. பி.எஸ்.சி வேதியியல் படித்துவிட்டுதான் நடிக்க வந்திருக்கிறார்.

இப்படி ஒரு நல்ல மனிதர். ஆனால் எல்லோரும் இவரை காதல் மன்னன்,  பல திருமணங்கள் ஆனவர், பல பெண்களின் சகவாசம் உள்ளவர் என்று எல்லாம் கூறுகிறார்களே அது ஏன் என்று யோசித்ததுண்டு. 
 
அப்போதுதான் எனக்கொரு உண்மை தெரியவந்தது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், புரிந்து கொள்ள 
வேண்டும்.  ஒரு துறையிலேயே முழுக்க முழுக்க ஈடுபாடு கொண்டவர்கள் மனது இறுக்கத்தை போக்குவதற்காக சிலவற்றில் மனதை திருப்புவதுண்டு.

சிலர் புத்தகம் படிப்பர். சிலர் இசை கேட்பர். படம் பார்த்தல், பட்டணம் பொடி, காப்பி, இயற்கை, கஞ்சா, மது, பெண்... இப்படி எதாவது ஒன்றில் பழக்கப்பட்டுவிடுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் புரிந்து கொள்ளவேண்டும். 

இன்று முற்றும் துறந்த சாமியாருக்கும் பெண் துணை கேட்கிறது.  ஒருவன் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருந்தாலும், சமூகத்திற்கு அவன் என்ன செய்கிறான் என்பதைதான் யோசிக்கவேண்டும். 

காதல் சக்கரவர்த்திகள் எல்லாம் தப்பித்துவிட்டார்கள். பாவம் காதல் மன்னன் மாட்டிக்கொண்டார். ஜெமினி தனது வாழ்க்கையில் எதையும் மறைத்ததில்லை.  அவர் வெளிப்படையானவர். அதற்கே தனி தைரியம் வேண்டும்.

ஜெமினி கணேசன்,  கமலை பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தியது பற்றி வாலி சொன்னார்.  கமலை பாலசந்தரிடம் மட்டுமல்ல, சின்னக் குழந்தையாக இருக்கும் போதே, ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகப்படுத்தி களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க வைத்தவரே ஜெமினிதான்.

மிகவும் அழகாக நாட்டியம் ஆடக்கூடிய தெய்வநாயகி என்பவரை,  இவர் திறமையானவர் என்று திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர் ஜெமினி. அந்த தெய்வநாயகிதான் கே.ஆர் விஜயா.

ஜெமினியைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன். ஒரு அக்ரகாரத்து வீட்டுப்பையன் இப்படி ஒரு உடல்வாகுடன் திகழ்கிறாரே என்று.  

வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் காளை அடக்கும் வெள்ளையத்தேவனாக நடித்திருப்பார். அதே போல் சரஸ்வதி சபதத்தில், கோழை வீரனாக மாறி மல்லனோடு மோதும் காட்சியில் நடித்திருப்பார். அப்போது அந்த மல்லனை அப்படியே தோளில் தூக்கிபோட்டு எறிவார்.   

ஜெமியின் தந்தையான ராமசாமி அய்யர் அந்தக் காலத்தில் கள்ளர், மறவர், அகமுடையர் என்று தேவர் குலத்தவர்களுடனே அதிகம் நட்புறவாடக்கூடியவர். அந்த வகையில் ஜெமினியும் சின்ன வயதில் இருந்தே தேவர்குலத்து சிறுவர்களுடன் பழகியிருக்கிறார். அவர்களிடம் இருந்து வீரத்தையும், உடல் தீரத்தையும் பெற்றிருக்கிறார்.   

கல்யாண பரிசு படம் பார்த்து உண்மையில் நான் அழுதுவிட்டேன். அதில் வரும்,  உச்சக்கட்ட காட்சியில்...   தனது முன்னால் காதலியும், தனது மனைவியின் தங்கையுமான கொழுந்தியாளுக்கு கல்யாணம் நடக்கும். அப்போது,  தாயில்லாத தனது குழந்தையை கல்யாணப்பரிசாக கொளுந்தியாளிடமே விட்டுவிட்டு தனது அத்தனை சோகத்தையும் தனது முதுகில் காட்டி நடந்து போவார். இதுவரை எல்லோரும் முகத்தில்தான் சோகத்தைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் ஜெமினி,  அந்த அத்தனை சோகத்தையும் தன் முதுகில் காட்டியிருப்பார். அந்தச் சோகம் சுமந்த முதுகில்தான் படமே முடியும்.  அப்படி தனது முதுகிலும் நடிப்பை வெளிப்படுத்திய ஒப்பற்ற நடிகர் ஜெமினி. 

முதல்வர் கலைஞர் :

ஜெமினி எல்லோராலும் நேசிக்கப்படுபவர்.மறைந்தும் மறையாத மாணிக்கம் அவர். வைரமுத்து கூறியதுபோல்,  ஆண்கள் கூடி, ஏன் மகன்கள் இருந்து நடத்தினால் கூட, இவ்வளவு சிறப்பாக இந்த விழாவை நடத்தியிருக்க முடியுமா என்று எண்ணுகின்ற வகையில் இந்த விழாவை கமலா செல்வராஜ் நடத்தியிருப்பது பாராட்டுக்குறியது. அவருக்கு ஜெமினி சார்பில் என் வாழ்த்துகள்.

ஜெமினி கணேசன், 17.11.1920 ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். அவருடைய தாயார் கங்கம்மா. தந்தையார் ராமு. ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. எனவே அவர் குழந்தைக்காக இரண்டாம் தாரமாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த "சந்திரம்மா'' என்ற பெண்ணை மணந்தார். அந்த மணம் கலப்பு திருமணம். இதை ஜெமினி கணேசன் பிறந்த பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைச் சாதியிலிருந்தே தள்ளி வைத்தது. ஆகவே, ஜெமினி பிறந்தபோதே ஒரு புரட்சி முழக்கத்தோடு பிறந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

இந்தக் கலப்பு திருமணத்திற்கு பிறகு, சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் மூத்த குழந்தைதான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி.

ஆக முத்துலெட்சுமி ரெட்டி இசை வேளாளர் சமுதாயத்தை சார்ந்தவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் முதன்முதலாக மருத்துவம் படித்த பெண்மணியான முத்து லெட்சுமி ரெட்டி புதுக்கோட்டை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த சுந்தர ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தக் கலப்பு திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் சமுதாய சீர்திருத்த பணிகளில் ஈடுபட்டனர்.

இது காமராஜர் அரங்கம் என்பதால், காமராஜரின் குருநாதர் சத்திய மூர்த்தி பற்றி நினைவூட்டுவதில் தவறில்லை. முத்துலெட்சுமி சென்னை மாகாண சட்டசபையில் 1929ல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தமிழக சட்டசபையில் தேவதாசி முறை ஒழிப்பு என்னும் சட்டத்தை கொண்டு வந்தப்போது...  ஒருவர் எழுந்து,  “அந்த வழக்கம் இருப்பது நல்லது. தேவதாசி முறை தொடர வேண்டும். ஏனென்றால், காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்தும் சமுதாயம் அந்தப் பெண்கள் சமுதாயம். எனவே பொட்டுக்கட்டும் வழக்கம் தொடர்ந்து அனுமதிக்கப்படவேண்டும்” என்று சொன்னார். அவர்தான் தீரர் சத்திய மூர்த்தி.

அதை எதிர்த்து ஒரு பெண் குரல் கிளம்பியது. “பெண்கள் சமுதாயம் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்தும் சமுதாயம் என்றால், அப்படிப்பட்ட பெண்களை உங்கள் வீட்டிலிருந்து அனுப்புங்கள் பார்க்கலாம்,” என்று அந்தப் பெண்குரல் முழங்கியது. அந்தப் பெண்குரல்தான் முத்துலெட்சுமி ரெட்டி.

மன்னிக்க வேண்டும் ஒரு வரலாற்று உண்மையை எடுத்து சொல்லும் போது அதிலே குறை வரக்கூடாது. அதனாலேதான் அந்த உண்மையை அப்படியே சொல்கிறேன். இந்திய பூபாளகத்தில், அன்று புரட்சிகரமாக முழங்கி, தேவதாசி முறையை ஒழித்த முத்துலெட்சுமி ரெட்டியாரின் திருவுருவப் படத்தை, எங்கள் இயக்க ஆட்சி நடைபெறும் போது, சட்டமன்ற மேலவையிலும், பேரவையிலும் வைத்து கௌரவபடுத்தியுள்ளோம். 

இதை இந்த விழாவில் சொல்வதற்கு சம்பந்தம் இருக்கிறது. ஜெமினி கணேசனுடைய அத்தைதான் முத்துலெட்சுமி ரெட்டி. அவருடைய படத்தை வைத்திருப்பது மட்டுமல்லாமல், அந்த அம்மையாரின் பெயரால் கர்பிணி பெண்களின் நலத்தை பாதுக்கும் திட்டத்திற்கு, “டாக்டர் முத்து லெட்சுமி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம்.

இத்திட்டத்தின் கீழ் 2006 ஆண்டுக்கு பிறகு, கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ள, 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. குழந்தைகள் பிறப்பதற்கு முன் 3000, குழந்தை பிறந்ததற்கு பின் 3000 என 6000 ரூபாய் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கிறோம் .இந்தத் திட்டத்திற்கும் “டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டம்” என்றுதான் பெயர் வைத்துள்ளோம்.

அந்த முத்து லெட்சுமி ரெட்டி அம்மையாரின் குடும்பத்து பிள்ளை ஜெமினி கணேசனும் பள்ளிப்பருவத்திலேயே புரட்சிகரமாகவே விளங்கினார். ஜெமினி அவர்களே எழுதியிருக்கும் புத்தகத்தில், அவரது சமஸ்கிருத ஆசிரியர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதில், “ ராஜா முத்தையா செட்டியார் உயர் நிலைப்பள்ளியில் நான் 7 ஆம் வகுப்பு படித்த போது, இருபது மாணவர்கள் மத்தில் பிராமணர் அல்லாத ஒரே மாணவன் கோவிந்தராஜுலு. ஆனால் அவனுடைய சமஸ்கிருத உச்சரிப்புதான் மிக நன்றாக இருக்கும். அப்படியும் ஆசிரியர், “பிராமணர் அல்லாத சூத்திரன் ஏன் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்? “ என கேட்பார். ஆசிரியரே அப்படி கேட்டவுடன், கோபத்தால் கொதித்தேன்.  இனம், குலம், மதம் என்ற சின்ன வட்டத்திற்குள் சிக்கிவாழ்வது தவறு . பரந்து விரிந்த இந்த உலகத்தில் பரத்த மனமுடையவனாக, இந்தியன் என்ற உணர்வோடு வாழ வேண்டும் என்பது அப்போதிலிருந்து எனக்குள் ஊறிப்போனது.”  என்று ஜெமினி கணேசன் குறிப்பிட்டுள்ளார். 

ஜெமினி கணேசன் அவருடைய வாழ்க்கையில் சீர்திருத்தவாதியாக, சாதி, மதம் இவைகளையெல்லாம் மறுப்பவராக, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்து கொண்டவராக, எல்லோரையும் நண்பர்களாகப் பெறுகிற அந்த பரந்த மனப்பான்மை உள்ளவராக வாழ்ந்து காட்டினார்.

அவருடைய வாழ்க்கைப் பாதை, நடந்து பார்த்து, உணர்ந்து பார்த்து, அவர் வழியிலே நாமும் புகழொளியைப் பரப்ப வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். 

தமிழின்பால் அவருக்குள்ள ஆர்வத்தை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்.  ஒருமுறை நான் கோலாலம்பூரில் தமிழ் மாநாட்டிற்குச் சென்றிருக்கிறேன். அந்த மாநாட்டிலே திரும்பிப் பார்த்தால், வணக்கம் என்ற ஒலி கேட்கிறது. யாரென்று பார்த்தால், ஜெமினி கணேசன்.

அந்த மாநாட்டிற்கு வந்து எங்களோடு இரண்டொரு நாட்கள் தங்கி பொழுதைப் போக்காமல், தமிழைப் பருகி, கருத்துக்களை ஏற்றுச் சென்றவர் அருமை நண்பர் மறைந்த ஜெமினி கணேசன். அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே,  மறைந்தும் மறையாத மாணிக்கம் என்று நான் அவரை சொன்னேன். அவர் மறையவில்லை. மறைந்தவர்களை நாம் மறைந்தவர்கள் என்று சொல்லாமல், மறையாதவர்கள் என்று சொன்னால் தான் அவர்களுடைய புகழும், பெருமையும் நம்முடைய நெஞ்சிலே என்றென்றும் பதிந்து நிற்கும்.

தொகுப்பு :~  நா. இதயா, ஏனாதி...

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [6]
Name : raamasarme Date :3/12/2013 12:09:48 PM
இடங்களுக்கு ஏற்ப பேசி செல்வதில் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு கிட்ட யாரும் நெருங்க முடியாது என்னமாய் பொய் புளுகு பாராட்டு - உண்மையில் ஜெமினி ஒரு அலுப்பு தட்டும் நோஞ்சான் நடிப்பையே தந்தார் - மதுரையில் பறந்த என்ற அழகிய டி எம் எஸ் படலை தனது அலுப்பு நடிப்பால் கெடுத்தவர் ஜெமினி அதே பாடலை சிவாஜியோ எம் ஜி ஆரோ நடித்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும் காதல் பாடல்களில் எம் ஜி ஆரே சிறப்பாக நடிப்பார்
Name : selvarajan Date :2/16/2013 5:29:34 PM
ஜெமினி கணேசன் ஒரு திறமையான நடிகர். அவரை போல் ஒரு நடிகர் அன்றுமில்லை இன்றுமில்லை. நாகரிகமான, பண்புள்ள நடிகர். அவருடைய பெண் பவீனத்தை இங்கு குறிப்பிட அவசியமில்லை. சினிமா உலகத்தில் இது சர்வ சாதாரணம். முதுகில் சோகத்தை காட்டியது ஜெமினி அல்ல. அது ஸ்ரீதரின் திறமை. பால் உணர்வை தூண்டும் பாடல்கள் இயற்றுவதில் பக்குவம் அடைந்த முதியவர் மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு கூப்பிட்டார்கள் என்று கூறுவது நம்ப முடியவில்லை. முன்னூறு ரூபாய் என்பதை மூவாயிரம் என்று கூறுகிறார் போலும்.
Name : Ashley Date :3/26/2012 4:37:05 PM
God, I feel like I sohuld be takin notes! Great work
Name : c.ananthapadmanabhan Date :11/27/2010 7:16:06 PM
ஜெமினி ஒரு சஹாப்தம் என்று கூறினால் மிகையாகாது. பெண்கள் மனதில் நீங்காத இடம் பிடிதுவிட்டவர் அவர். அவர் படமென்றால் திரைப்படக்கூடத்தில் பெண்கள் நிறைந்து வழிவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
Name : neethi Date :11/25/2010 4:39:09 AM
வைரமுத்து அவர்களே முதுகினால் சோகத்தை காட்டி நடிக்கும் நடிப்பை சிவாஜி பலபடங்களில் அதற்கு முன்னரே நடித்துவிட்டார் நீங்கள் பார்க்காததற்கு என்ன செய்யமுடியும்.அத்துடன் சோகத்தில் திரும்பி நடந்தால் யார் முதுகும் துயரத்தால் சிறுத்திருக்கும் இது யதார்த்தமே , மற்றும் ஒருவரின் பாலியல் நடவடிக்கைகளை பேசும் இடம் தருணம் மேடை இதுவல்ல என்ற பண்பு இல்லாத நீங்கள் என்ன புலவரோ.
Name : raj Date :11/24/2010 8:28:57 AM
எம்ஜியாருக்கு ஒரு சில பாடல்கள் எழுதினேன் வாலி அவர்களே நன்றி மறந்து பேசதிர்கள்